முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆரோக்கிய திட்டத்துடன் இணைக்கப் பட்டதால் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதியை பெற முடியும்.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்கள் குறித்து விவாதிக்க தென் மாநில சுகாதார செயலாளர்களின் கூட்டம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
தேசிய சுகாதார ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆணையத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் கெடம், துணை தலைமை செயல் அதிகாரி டாக்டர் விபுல் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா, சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என்று கூறினார்.
முதலமைச்சரின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் டாக்டர் உமா, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் உடன் இணைக்கப் பட்டதால் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதியை பெற முடியும் என்று தெரிவித்தார்.
இதன் மூலமாக தனியார் மருத்துவமனையில் கூட இலவசமாக சிகிச்சை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் அதிக பயன்பாடு கொண்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்றும், அரசு மற்றும் தனியார் கூட்டு முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

