ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

259 0

ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் 25 வயதான நமசிவாயம் டிலக்சன் நேற்று (05) மாலை 4 மணியளவில்  நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரதேச செயலாளர் பிரிவின் காதலியார் சம்மணங்குளம் கிராம அலுவலர் பிரிவின்  ஏம்பகுளம் குளத்தில்  நில அளவை திணைக்களத்தினர் நில அளவை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது நில அளவைத் திணைக்களத்தின் பணியாளராக பணிபுரிந்து வந்த வித்தியாபுரம் பகுதியை சேர்ந்த  ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நமசிவாயம் டிலக்சன் உள்ளிட்ட நான்கு பேர் நில அளவை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது நில அளவை பணிக்காக குளத்தில் இறங்கியபோதே குறித்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சேற்றில் புதையுண்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

இதையடுத்து கிராம மக்கள் இராணுவத்தினர் இணைந்து அவரின் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் நில அளவு பணிக்கு பணியாளர்களை பொறுப்பற்ற தனமாக இறக்கிய அதிகாரிகள் மீது பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.