மிரிஹானை ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகள்-கைது செய்யப்பட்டிருந்த அனைவருக்கும் பிணை

226 0

அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமையல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை  பெற்றுக்கொள்ள நாடளாவிய ரீதியில் காணப்படும்  சிரமத்தால், கடந்த மார்ச் 31 மாலை 6.00 மணியளவில் , மிரிஹானை – ஜுப்லிகணு சந்தியில் ஆரம்பித்த அமைதி ஆர்ப்பாட்டம்,  எம்புல்தெனிய ஜனாதிபதி இல்லத்துக்கு அருகே  பெங்கிரிவத்தை வீதியில் இரவு  வேளையில் இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட 53 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் மற்றும் அதனிடையே நடந்த வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்த 53 பேரில் கடந்த 2 ஆம் திகதி 21 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே, எஞ்சிய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி  நுகேகொடை , கங்கொடவில நீதிவான் பிரசன்ன அல்விஸ் நேற்று ( 5) உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட 53 சந்தேக நபர்களில் 27 பேர் கடந்த 2 ஆம் திகதி கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 6 பேர் அடையாள அணிவகுப்புக்கு அவசியமானவர்கள் என விசாரணையாளர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில் அந்த 6 பேரும் நேற்று முன் தினம் ( 4) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஏனைய 21 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனைவிட,  சந்தேக நபர்களாக கருதி கைது செய்யப்பட்ட மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். கங்கொடவில நீதிவான் பிரசன்ன அல்விஸின் அறிவித்தலின் பிரகாரம், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த  23 பேரை  கல்கிசை நீதிவான் ரவி மதுகமவும்,  தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த  3 பேரை மாளிகாகந்த மேலதிக நீதிவான் கிரேசும் சென்று பார்வையிட்டு 4 ஆம் திகதிவரை  அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டனர். அவர்கள் அனைவரும் அடையள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு இடம்பெறாத நிலையில் வழக்கு நேற்று ( 5) அடையாள அணிவகுப்புக்காக விசாரணைக்கு வந்தது. இதன்போது   விளக்கமறியல் உத்தரவின் கீழ் இருந்த 31 சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்பட்டதுடன், அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்ட 10 சாட்சியாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில்  சந்தேக நபர்களுக்காக நேற்று (5) ஜனாதிபதி சட்டத்தரணிகளான காலிங்க இந்ரதிஸ்ஸ, சரத் ஜயமான்ன உள்ளிட்ட 45 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். விசாரணையாளர்களுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி  கிரியாகம பிரசன்னமானார்.

இந்நிலையில் நடந்த அடையாள அணிவகுப்பில்,  31 சந்தேக நபர்களையும் அடையாளம் காண  9 சாட்சியாளர்கள் தவறினர். எனினும் ஒரே ஒரு சாட்சியாளர் மட்டும் 31 பேரில் ஒருவரை மட்டும் அடையாளம் காட்டினார்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் அனைவரையும்  தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் பிரசன்ன அல்விஸ் அனுமதித்தார்.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டவாதி லக்மினி ஹிரியாகம, சத்தேக நபர்களுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் எதிர்ப்பில்லை என தெரிவித்தார்.

எனினும்  நீதிவான் பிரசன்ன அல்விஸ்,  சந்தேக நபர்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் கடந்த 2  ஆம் திகதியும் நேற்று 5 ஆம் திகதியும் முன் வைத்த விடயங்களை  சுட்டிக்காட்டியதுடன், விசாரணையாளர்கள் பீ அறிக்கை மற்றும் மேலதிக அறிக்கை ஊடாக  முன் வைத்துள்ள விடயங்களும், மன்றில் அரச சட்டவாதிகள் ஊடாக கூறும் விடயங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக  குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே பிணையளித்த நீதிவான் வழக்கை எதிர்வரும் மே 13 ஆம் திகதிக்கு  ஒத்தி வைத்தார்.

முன்னதாக கடந்த 2 ஆம் திகதி, மிரிஹானை ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 27 பேர் மட்டும்  அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.  இதன்போது சந்தேக நபர்களுக்காக  7 ஜனாதிபதி சட்டத்தரணிகளுடன் சுமார் 400 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அனுர மெத்தேகொட, காலிங்க இந்ரதிஸ்ஸ, சரத் ஜயமான்ன, அனுஜ பிரேமரத்ன,  மைத்திரி குணரத்ன, இக்ராம் மொஹம்மட்  ஆகியோர் ஆஜராகினர்.

அன்றைய தினம் விசாரணையாளர்களுக்கக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது, பொலிஸாருக்காக மன்றில் விடயங்களை முன் வைத்த திலீப பீரிஸ், ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை  தாம் மதிப்பதாகவும் எனினும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்ததுடன் ஆர்ப்பாட்டக் காரர்கள் பஸ் வண்டிகள் , பொலிஸ் வாகனங்களுக்கு தீ மூட்டியதாக குறிப்பிட்டு அவர்களை விளக்கமறியலில் வைக்க கோரியிருந்தார்.

இதன்போது மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி சலிய பீரிஸ் உள்ளிட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் வாதங்களை முன் வைத்த நிலையில்,  அமைதி ஆர்ப்பாட்டத்தினையே தமது சேவை பெறுனர்கள் முன்னெடுத்ததாக கூறினர். அத்துடன் இராணுவ பஸ் வண்டிக்கு தீ மூட்டிய நபர் ஒரே ஒருவரே என  வீடியோ  புகைப்பட ஆதாரங்களுடன் மன்றில் முன்வைத்த அவர்கள், அவர் ஆர்ப்பாட்டக் காரர் இல்லை எனவும் அவர் தீ வைப்பதை பாதுகாப்பு தரப்பு பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்கட்டினர்.

இதன்போது நீதிவான் பிரசன்ன அல்விஸ், குறித்த நபர் கைதானோரில் அடங்குகின்றாரா என பொலிசாரிடம் வினவிய போது பொலிஸார் அதற்கு இல்லை என பதிலளித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டம் செய்தமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ்  குற்றச்சாட்டு முன் வைத்த பீ அறிக்கை சட்ட வலுவற்றது என   ஜனாதிபதி சட்டத்தரணிகள் நீதிவானுக்கு சுட்டிக்காட்டியிருந்தனர். பொதுச் சொத்து துஷ்பிரயோக் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு சந்தேக நபரும் செய்த குற்றத்தை பீ அறிக்கையில் உள்ளடக்கி இருக்க வேண்டும்  எனவும்  அத்துடன் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு மேற்பட்ட  தர நிலையை உடைய அதிகாரி பெறுமதி மதிப்பீட்டு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி அவர்கள் அவ்வாத்ததை முன் வைத்திருந்தனர்.

அத்துடன் வாதங்களை முன் வைத்த  ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, கடந்த 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணி  விஜேதாச லியன ஆர்ச்சி கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் முழு சட்டத்தரணிகள் சங்கமும் ஒன்று சேர்ந்து ஆஜராகும் வழ்க்ககு இதுவென மன்றில் சுட்டிக்காட்டி வாதங்களை  முன் வைத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.