ராணுவ ஆட்சியை ஏற்படுத்துமா? கலைக்குமா?

309 0

தமிழரின் காணிகளை ராணுவமும் தொல்பொருள் திணைக்களமும் அபகரித்து வருவது கோதபாயவுக்குத் தெரியாதாம்! விடுதலைப் புலிகளின் இலக்கை அடைய கூட்டமைப்பு முனைகிறதாம்! பிளவுபடாத எக்கராஜ்ய எந்தளவுக்கு தமிழர் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும்?

கடந்த சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகள் கொழும்பை மையப்படுத்தி ஆரம்பித்துள்ளன.

69 லட்சம் சிங்கள மக்களால் ஜனாதிபதி கதிரையில் தாம் அமர்த்தப்பட்டதாக அடிக்கடி கூறி தம்பட்டம் அடித்து வந்த கோதபாயவின் மிரிகான – பங்கிரிவத்தையிலுள்ள இல்லம், அதே சிங்கள மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக ஆரம்பச் செய்திகள் வெளியாகின.

கோதபாய வெளியே வா, கோதபாயவை வீட்டுக்கு அனுப்புவோம், கோதபாய பதவி விலக வேண்டும் என முழக்கமிடும் கோ~ங்களால் அந்தப் பிரதேசம் அதிர்ந்தது. ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டும் பாதுகாப்பின்மையால் கோதபாய வேறிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குண்டாந்தடி, கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பதிலுக்கு கோதபாயவின் இல்லத்தை பாதுகாக்கச் சென்ற ராணுவ வண்டி தீக்கிரையாக்கப்பட்டது. சஜித் பிரேமதாசவை ஆட்சிக்குக் கொண்டு வர தாங்கள் போராடவில்லையென்ற குரலும் அங்கு எழுப்பப்பட்டது.

அப்படியானால் இவர்கள் விரும்பும் அடுத்த ஆட்சியாளர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அண்மையில் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களையா இவர்கள் விரும்புகிறார்கள்.

கொழும்பில் ஆர்ப்பாட்டம் கட்டை மீறியதால் முக்கியமான பகுதிகளிலும், நுகேகொடவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சிறுபான்மையின மக்கள் கூடுதலாக வாழும் கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு ஆகியவை ஊரடங்குப் பகுதிகள் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

சில நாட்களுக்கு முன்னர் கொழும்பின் அருகிலுள்ள நுகேகொடவில் சுமார் முப்பதினாயிரம் பேர் கலந்து கொண்ட அரச எதிர்ப்பு பேரணியொன்றை ஜே.வி.பி. நடத்தியது. இதற்கு மிக அருகாமையில் தான் கோதபாயவின் இல்லம் அமைந்துள்ளது. அதே நாட்களில்தான் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குழுவினருடன் கோதபாயவும் மகிந்தவும் ஒரு சந்திப்பை நடத்தி தமிழரின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவெடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

அவ்வேளை, விடுதலைப் புலிகளை சம்பந்தப்படுத்திய செய்தி ஒன்றும் தவறாமல் வந்தது. புலிகளின் இலக்கை அடைய கூட்டமைப்பு முயற்சி என்று, அண்மையில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கம்மன்பில கூறியதானது சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றியிருக்கும்.

இவைகளுக்கு விடை காண முனையும் வேளையில், கோதபாயவை இலக்கு வைத்து அவரை முன்னர் ஆதரித்த சிங்கள மக்கள் திரண்டெழுந்திருக்கும் போராட்டம், இறுதியில் எவ்வாறு திசை திரும்பும் அல்லது திருப்பப்படும் என்ற அச்சம் கடந்த கால வரலாறுகளின் வழியாக ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கோதபாய ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பிரதான பதவிகளில் படையினரையே நியமித்துள்ளார். அதுவே இன்றும் தொடர்கிறது. ராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்கிறது என்பதை அரசியல் ஈடுபாடற்ற சாதாரண பாமரனால்கூட் அவதானிக்க முடிகிறது.

தமக்கெதிரான சிங்கள் மக்களின் போராட்டம் நீளுமானால் இதனையே தமக்கு சாதமாக்கி முழுமையான ராணுவ ஆட்சி ஒன்றை ஏற்படுத்த கோதபாய தயங்க மாட்டார். வாழ்நாள் பூராவும் துப்பாக்கியையே துடைத்து அதன் பளபளப்பில் அழகு பார்த்து, அதன் வில்லை இழுத்து மனித இரத்தத்தை உறைய வைத்த ஒருவரது மனப்பாங்கு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

பொதுவாக, சிங்கள ஆட்சியாளார்களிடையே பிரச்சனைகள் ஏற்பட்டால், அது இறுதியில் அப்பாவித் தமிழரையும் முஸ்லிம்களையும் பதம் பார்ப்பதாகவே முடியும். கொலை, கொள்ளை, உடைமைகள் எரிப்பு, அகதி வாழ்க்கை என்பவை கடந்த காலங்களில் சிறுபான்மை இன மக்கள் கற்றுக் கொண்டவை.

இன்று, கோதபாய என்ற ஒருவருக்கெதிராக என நடைபெறும் போராட்டம், இறுதியில் அப்பாவி சிறுபான்மை மக்களை அழித்தொழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சில நாடுகளுக்குண்டு. அதில் அமெரிக்காவும் சீனாவும் முக்கியமானவை.

சீனாவைப் பொறுத்தளவில் ராஜபக்சக்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் அது சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமானதாக இருக்காது.

இந்த நெருக்கடிக்குள், சம்பந்தன் தலைமையிலான தமிழர் தரப்பினர் கோதபாயவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நான்கு அம்சங்கள் ஏற்கப்பட்டதாக, அல்லது நடைமுறைப்படுத்தப்படுமென்று நம்பிக்கை அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலத்தில் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க உயரதிகாரி விக்டோரியா நோலன்ட் மகிழ்ச்சி தெரிவித்ததாக வெளியான தகவல், கோதபாயவின் திரைமறைவு நாடகத்தை மூடி மறைப்பதற்கு கிடைத்த முதல் வெற்றி.

இதனையடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் மேற்கொண்ட கொழும்பு விஜயம் கோதபாயவின் மறைமுக திட்டத்துக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி மட்டுமன்றி அதற்கு வலுவூட்டியதாகவும் அமைந்தது.

ஜெய்சங்கர் முதலில் கோதபாயவை சந்தித்தார். தமிழர் தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட நான்கு அம்சங்களை கோதபாய எடுத்துக் கூறினார். அரசியல் கைதிகள் பிரச்சனைக்கு சுமுகமான ஆராய்வு, தமிழரின் காணிகளை ராணுவமும் தொல்பொருள் திணைக்களத்தினரும் அபகரிப்பதை நிறுத்துவது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கென ஒரு நிதியம் என்பவை இணக்கம் காணப்பட்ட நான்கு விடயங்களென கோதபாய தெரிவித்தவைகளை, அச்சொட்டாக சம்பந்தன் குழுவினரும் ஜெய்சங்கரை சந்தித்தபோது தெரிவித்தனர்.

இரு தரப்பினரும் ஒரே விடயத்தை ஒரே மாதிரியாகக் கூறியது அமைச்சர் ஜெய்சங்கருக்கு நிலைமையை சுகமாக்கிவிட்டது. இரு தரப்புக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டது நல்லது என்று ஜெய்சங்கர் கூறியதற்கு முழுமையான அர்த்தம் உண்டு. இனி இவ்விடயத்தில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்கத் தேவையில்லை, நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று இந்தியா விலகிக் கொள்வதாகக்கூட அர்த்தப்படலாம்.

தமிழரின் அரசியல் அபிலாசைகள் பற்றிப் பேச கோதபாய சம்பந்தன் தரப்பிடம் இரண்டு மாத தவணை கேட்டுள்ளார். புதிய அரசியலமைப்புத் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை மொழி;பெயர்க்க இரண்டு மாதம் தேவை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியதால் சம்பந்தன் தரப்பும் அதனை ஏற்றுக்கொண்டது.

இதிலுள்ள முக்கியம் என்னவெனில், ஓர் அரசாங்கத்துக்கு அறிக்கையொன்றை மொழிபெயர்க்க இரண்டு மாதங்கள் தேவை என்பதும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதும்தான். ஜெனிவாவில் செப்டம்பர் மாதம் இலங்கை சந்திக்கவிருக்கும் நெருக்கடியிலிருந்து காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான கால நீடிப்புகள் இலங்கைக்கு தேவை என்பதை சம்பந்தன் தரப்பினர் ஏனோ புரிந்து கொள்ளவில்லை, அல்லது அதனை புரிந்து கொண்டும் அதற்கேற்றவாறு அனுசரணையாக இருக்கின்றனர்.

இவர்களின் சந்திப்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான இன்னொரு அம்சமாக இருப்பது, தமிழர் காணிகள் அபகரிப்பைப் பற்றி கோதபாயவும் மகிந்தவும் எதுவுமே தெரியாதவர்கள்போல் நடித்துக் கொண்டது.

ராணுவம் காணியை அபகரிப்பது பற்றி சுமந்திரன் எடுத்துக்கூறிய போது – அவர்கள் எதற்காக காணிகளை சுவீகரிக்கிறார்கள் என்று கேட்டதும், தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் காணிகளை எடுப்பது பற்றிக் கூறியபோது – அவர்களின் வேலை தொல்பொருள் ஆய்வுதான் எதற்காக காணிகளை எடுக்கிறார்கள் என்று ஆச்சரியத்தோடு வினவியதும், கோதபாயவின் அதியுச்ச நடிப்பு.

இவ்வேளை சுமந்திரன் தரப்பு அதற்கான ஆதாரங்களை ஆவணங்களாகக் கொண்டு சென்றிருந்தால் அதனை பேச்சு மேசையில் தூக்கிப் போட்டு கோதாவின் முகத்தில் கரி பூசியிருந்திருக்கலாம். சும்மா பேச்சுக்குப் போனவர்கள்போல் வெறுங்கையோடு போனவர்களால் என்ன செய்ய முடியும்?

இவர்கள் பேச்சு முடிந்து வெளியே வந்தபோது, ராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் தமது பங்குக்கு சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு – ராணுவம் தமிழர் காணிகளை சுவீகரித்ததாகக் கூறினீர்களாமே, அது எங்கே என்று கேட்டது கோதபாயவை விஞ்சிய நடிப்பு.

மார்ச் மாதம் 25ம் திகதி சம்பந்தன் குழுவினரைச் சந்திப்பதற்கு முன்னர், சில கட்சியினரை சர்வகட்சி மாநாடு என்ற பெயரில் 23ம் திகதி கோதபாய சந்தித்தார். ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன தரப்பினரோடு சம்பந்தனும் சுமந்திரனும் இதில் பங்குபற்றினர்.

இது தொடர்பான ஒளிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளது. சுமந்திரனை கோதபாய உரையாற்றுமாறு அழைக்கும்போது ளாழசவ (சுருக்கமாக) என்று கூறுகிறார். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுமந்திரன் ஒரு நிமிடம் மட்டுமே உரையாற்றினார்.

‘இரண்டு நாட்களின் பின்னர் நாங்கள் சந்திக்கவிருப்பதால், அப்போது அந்த விடயங்களை பேசுவோம். நாங்கள் ஒன்றாக இணைந்து இது ஒரு நாடு, இந்த நாட்டில் எங்களுக்கும் ஈடுபாடு உண்டு, இந்த நாட்டின் நலனில் நாம் இணைந்து பணியாற்றலாம்” (ர்ழற உயn றந பழ கழசறயசன வழபநவாநச யள ழநெ ஊழரவெசல் றந யசந உழஅஅவைவநன வழ வாளை உழரவெசல. றுந றடைட றழசம கழச வாந றநடகயசந ழக வாளை உழரவெசல) என்று வேறெவரும் குறிப்பிடாத எக்கராஜ்ய என்ற சிந்தனையை சுமந்திரன் மட்டு;ம் இங்கு வெளிப்படுத்தி, அதுவே தமிழரின் தாகம் என்பதுபோல் காட்டிக்கொண்டார்.

நல்லாட்சிக் காலத்திலிருந்து இதனையே தமது வாய்ப்பாடாகக் கொண்டிருக்கும் சுமந்திரன், இலங்கையின் சிதைந்து போன பொருளாதாரத்திலிருந்து மீள கோதபாய கூட்டிய மாநாட்டில் மறவாது தமது விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.

நான்கு அம்ச இணக்கம், புதிய அரசியலமைப்பு, நட்பு நாடுகளின் ஆதரவுப் பங்களிப்பு என்பவை, புதிதாக உருவாகியிருக்கும் கோதபாயவுக்கு எதிரான 69 லட்சம் சிங்கள வாக்குகளின் முன்னால், எந்தளவுக்கு தாக்குப்பிடிக்கப் போகிறது என்பதை அடுத்த வாரங்கள் பதிலளிக்கும்.

பனங்காட்டான்