இளங்கன்று பயமறியாது என்பது போல மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பாப்பாக்குறிச்சி வரையிலான புதிய பேருந்து வழித்தட சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காட்டூர் பகுதியில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களுக்கு விரைவில் பேருந்து சேவை தொடங்கப்படும். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனியார் பள்ளிகள் தங்களின் வாகனங்களை பராமரித்து அதை இயக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் அதனை கண்காணிக்கவும் வேண்டும்.
இளங்கன்று பயமறியாது என்பது போல மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். படிக்கட்டு பயணத்தினை மாணவர்கள் பேஷனாக நினைக்கக்கூடாது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்தித்த போது அளித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவில் தெரிவித்துள்ளார்.
தற்போது நீட் தேர்வு ஜீலை 17 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார் பில் வழங்கப்படும் நீட் பயிற்சி தொடர்ந்து வழங்கப் பட்டு வருகிறது.
அதே நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

