திருப்பூர் அருகே ரூ.2¼ கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் நவநாரி கிராமம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நவநாரி கிராமத்தில் 15 ஏக்கர் 39 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலத்தினை சக்திவேல், பிரகாஷ், நாச்சிமுத்து, பொன்னுசாமி ஆகிய 4 நபர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இதனை எதிர்த்து கோவில் செயல் அலுவலர் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78 ன் கீழ் ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்ற திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இதையடுத்து திருப்பூர் இணை ஆணையர் உத்தரவின்படி திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ், தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தாராபுரம் சரக ஆய்வாளர் வடிவுக்கரசி, கோவில் செயல் அலுவலர் சதீஷ், போலீசார், வருவாய் துறையினர் சென்று ஆக்கிர மிப்பு நிலத்தை மீட்டனர். அந்த நிலத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 30 லட்சம் ஆகும்.

