பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில் குடும்பத்தினர் தலையீட்டை தடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

247 0

தி.மு.க.வினரின் வசூல் வேட்டையைப் பார்த்து வீட்டு உரிமையாளர்களும், வியாபாரிகளும் கலக்கம் அடைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-கவுன்சிலர் பணி என்பது மக்களைக் காக்கும் பணி. மக்களுக்கு சேவை செய்வது தான் அவர்களது இன்றியமையாப்பணி. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் நோக்கமே வேறு என்பது போல் தி.மு.க. கவுன்சிலர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மகளிர் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே ஆணாதிக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டையே கொச்சைப்படுத்தும் நோக்கில் தி.மு.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதேபோல், தி.மு.க.வினரின் வசூல் வேட்டையைப் பார்த்து வீட்டு உரிமையாளர்களும், வியாபாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அராஜகச் செயல்களுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில் அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஈடுபடுவதைத் தடுக்கவும், மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.வினர் மீது சட்டப்படி உரியநடவடிக்கை எடுக்கவும், வீட்டு உரிமையாளரை மிரட்டியவர்கள் மீதும், உணவுக் கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீதும் சட்டப்படி வழக்கு பதிவு செய்து தண்டனைப் பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.