பிரேமலால் ஜயசேகர விடுதலை

130 0

மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்களை ஏற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன ஆகியோர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, சம்பவம் இடம்பெற்ற போது பிரதிவாதிகளின் கைகளில் துப்பாக்கிகளில் இருந்தமை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமையக்கான சாட்சியங்கள் இல்லை என குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் பிரமலால் ஜயசேகர உட்பட மூன்று சந்தேக நபர்களுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.