நாட்டின் தலைவரைக் கோழை என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் கூற முற்படுகின்றனர் !

132 0

நாட்டின் தலைவரைக் கோழை என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் கூற முற்படுகின்றனர் எனவும் அவர் அப்படி இல்லை, நல்ல பௌத்த தலைவர் எனவும் ஒன்றுபட்டு இந்த பௌத்த தலைவர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று (30) அலரிமாளிகையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட நீர்ப்பாசன செழுமையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகங்கள் தவறுகளை மட்டுமே காட்டுகின்றன. ஏரிக்கரை அருகே போராட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் வாவி நிர்மாணிக்கப்படுவது காட்டப்படவில்லை.

மிகவும் இக்கட்டான காலப்பகுதியில் நாம் இந்த அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றோம். நாட்டில் மிகவும் இக்கட்டான தருணத்தில், மக்கள் மிகவும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்து, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் பாடுபட்டு வருகின்றோம்.

நிதி மற்றும் பாதுகாப்பு சிக்கல்களில் உள்ள ஒரு நாட்டை தான் நாம் பெற்றுள்ளோம். முன்னைய அரசாங்கம் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காத காரணத்தினால் இன்றும் எமது நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எத்தனை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கேட்பார்கள். என்ன பேசினாலும் கடந்த அரசில் ஒரு மின் உற்பத்தி நிலையம் கூட கட்டப்படவில்லை. ஒரு மின் உற்பத்தி நிலையத்தை கூட கட்டாதவர்கள் இன்று மின்சாரம் கேட்டு வீதியில் இறங்கி வருகின்றனர்.

ஒரு குளம் கூட கட்டாத, நீர்ப்பாசனத் திட்டம் எதனையும் முன்னெடுக்காதவர்கள் இன்று விவசாயிகளுக்காக பேசுகின்றனர். மஹிந்த ராஜபக்‌சவின் காலத்திலே விவசாய சமூகம் பொருளாதார ரீதியாக வலுவடைந்தது. விவசாயிகள் விஷம் குடிக்கும் காலம் முடிவுக்கு வந்தது.

உரப்பிரச்சினை வரும்போது ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் வேளையில், விவசாய சமூகத்தை மனரீதியாகச் சிதைக்கும் இன்னொரு குழுவும் உள்ளது. ஊடகங்களும் இதில் பங்கேற்கின்றன.

மாலை நேரச் செய்திகளைப் பார்த்தால் யாராவது பொய்யாகக் கிளர்ந்தெழுந்தால் அதைக் காட்டுவார்கள். ஆனால் 100 குளங்கள் கட்டியதாகக் காட்டப்படவில்லை. வீதிகள் தொடர்பிலும் அப்படித்தான்.

ஜனாதிபதி கஷ்டத்தில் விழுந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார். நமது அரசு அதிகாரிகள், அரசியல் அதிகாரிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதை மிகவும் சிரமப்பட்டுக் கட்ட முயற்சிக்கின்றனர்.

ஆனால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். கொள்ளை நோயிலிருந்து நாட்டைக் காப்பாற்ற ஜனாதிபதியும் அரசாங்கமும் செயற்படும் போது, ​​அந்த நோயை மக்களுக்குப் பரப்புவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்.

மக்கள் வீதிக்கு இறக்குகிறார்கள். மக்கள் இறப்பதைப் பார்க்க விரும்பும் எதிர்க்கட்சி தான் இன்றுள்ளது. உள்ளேயும் வெளியேயும் உள்ள பிரச்சினைகளால் இன்று அழுத்தம் ஏற்பட்டது.

இன்று அந்த சவால் வரும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் சிலர் சென்று விடுகிறார்கள் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.