தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 282 பட்டதாரிகள் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றனர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
வேந்தரும், கவர்னருமான ஆர்.என். ரவி தலைமையில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் செயலர் முனைவர் பி.கே.ஜோஷி ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் வரவேற்று பேசினார்.
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 282 பட்டதாரிகள் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றனர். 204 பேர் நேரடியாகவும், 78 மாணவர்கள் அஞ்சல் மூலமாகவும் பட்டம் பெற்றனர்.
கல்வித் தகுதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்காக மொத்தம் 101 பதக்கங்கள் மற்றும் விருதுகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டன.
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவரான ஆர்.சங்கர் 26 பதக்கங்கள் மற்றும் இரண்டு பண விருதினை பெற்று பல பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
முதுநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பில் தமிழினி 6 பதக்கங்களையும் முனைவர் பட்டப்படிப்பில் ரஞ்சனி ராஜசேகரன் 4 பதக்கங்களையும் பெற்றனர். அனைவரையும் கவர்னர் பாராட்டினார்.
பி.டெக் (உணவு தொழில் நுட்பம்) பட்டப்படிப்பில் பூர்விதா 2 பதக்கங்களையும், பி.டெக் (கோழியின தொழில் நுட்பம்) பட்டப் படிப்பிற்காக ரமணி 2 பதக்கங்களையும் பெற்றனர்.
மேலும் இந்த கல்வியாண்டில் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதன்மை பெறும் மாணவர்களை சிறப்பிக்கும் பொருட்டு பல்கலைக்கழக அளவில் 12 மற்றும் கல்லூரி அளவில் 3 புதிய கல்வி அறக்கட்டளை விருதுகள் அறிவிக்கப்பட்டது.

