தை அமாவாசை: ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி தர்ப்பணம் செய்தனர்

274 0

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடி பின்னர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாதந் தோறும் வரும் அமாவாசை நாளில் பக்தர்கள் குவிந்து அக்னி தீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதிலும் வருடத்தில் முக்கியமாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று பக்தர்கள் திரளாக குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

அதன்படி இன்று தை அமாவாசயையொட்டி நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக கார், வேன், பஸ்களில் பக்தர்கள் ராமேசுவரத்துக்கு வந்தனர். தை அமாவாசை நாளான இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை 4 மணியளவில் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடி பின்னர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டத்தால் அலை மோதியது.

காலை 7 மணியளவில் கருடவாகனத்தில் ராமர் பஞ்ச மூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக்கடலில எழுந்தருளினார். பின்னர் அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.

நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

தை அமாவாசையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். போலீஸ் டி.எஸ். பி. காந்திமதி நாதன் தலைமையில் ராமேசுவரத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். பக்தர்கள் கூடும் இடங்களில் சி.சி.டிவி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தன. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகையா மற்றும் போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தினர்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி ஆணையாளர் ஜெயராம்ராஜா, சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். ராமேசுவரத்தில் பக்தர்கள் மீண்டும் ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.