21 மாநகராட்சிகளிலும் நிலைக்குழு, மண்டல தலைவர் பதவி தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இல்லை

221 0

சென்னையில் காங்கிரசுக்கு 14 கவுன்சிலர்கள் இருப்பதால் ஒரே ஒரு மண்டலமாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து 21 மாநகராட்சிகளிலும் மேயர்கள், துணைமேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று விட்டனர். அடுத்தகட்டமாக மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதற்கான தேர்தல் வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், நெல்லை, ஈரோடு, கரூர், ஓசூர், தூத்துக்குடி, வேலூர், நாகர்கோவில், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, தஞ்சாவூர், கும்பகோணம், திண்டுக்கல், தாம்பரம், ஆவடி ஆகிய 21 மாநகராட்சிகளிலும் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

வார்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து மண்டலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இதுதவிர 8 நிலைக்குழுக்கள் உள்ளன.

மண்டல தலைவர் பதவி மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் பதவி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்பட எந்த கட்சிக்கும் வழங்கப்படாது என்று கூறப்பட்டு இருப்பதாக தி.மு.க. தரப்பில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் சென்னையில் காங்கிரசுக்கு 14 கவுன்சிலர்கள் இருப்பதால் ஒரே ஒரு மண்டலமாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியிலும் காங்கிரசுக்கு மண்டல குழு தலைவர் பதவி ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.