50 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

210 0

தமிழகத்தில் 18 வயதை கடந்த நபர்களில் 92.10 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும் 75.50 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 26-வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து 26-வது வாரமாக தமிழ்நாட்டில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 3,90,41,963 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 50,61,287 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளார்கள். 1,34,97,690 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பிற சேவைத்துறை அலுவலர்களால் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பப்படுகிறது.
12 முதல் 14 வயதுடைய 21,21,000 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்தவாரம் தொடங்கப்பட்டு 10,91,841 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களில் 33,46,000 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 28,58,680 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 20,37,866 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 18 வயதை கடந்த நபர்களில் 92.10 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும் 75.50 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் தடுப்பூசி செலுத்துவதில் மிக சிறப்பான முறையில் 99 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும் 81 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12,585 ஊராட்சிகளில் நேற்று இரவு வரை 3,240 ஊராட்சிகளிலும், 121 நகராட்சிகளில் 27 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மேலும் 5 மாவட்டங்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியுள்ளன. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டங்கள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு முதல்-அமைச்சர் கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்த்துறை அரசு மருத்துவம் முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள் டாக்டர் மனீஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், டாக்டர் செல்வ விநாயகம், டாக்டர் ஜெகதீசன், டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.