பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்.விஜயத்தின் போது அவரை சந்திப்பதற்கு முற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளை அடாவடித்தனமான முறையில் தடுத்து நிறுத்தியதை தாம் வன்மையாக கண்டிப்பதாக திருகோணமலை மாவட்ட கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
இன்று (25) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
யாழில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் பாதுகாப்பு படையினரால் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அடாவடித்தனமாக பேருந்துகளில் ஏற்றிச் செல்ல முற்பட்டபோது பலரது ஆடைகள் கிழிந்து இருக்கிறது.இதனை தமது சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களது உரிமைகளை வழங்காத குறித்த ஆட்சியாளர்களிடம் இருந்து எந்தவிதமான நீதிப் பொறிமுறையினையும் எதிர்பார்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் இதன் காரணமாகவே சர்வதேச ஜனநாயக நீதிப் பொறிமுறை ஒன்றினை தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பாக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், மேலும் மரண சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தெரிவித்திருக்கும் நிலையில்,குறித்த முடிவினை எடுப்பதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளுடன் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் வழங்கி ஏதேனும் தீர்மானத்தை எடுத்திருக்க முடியும் மாறாக இந்த அரசானது தன்னிச்சையான முடிவை எடுத்து வருகிறது என குற்றம் சுமத்தினார்.
இவ்வாறான அராஜகமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எதிர்வரும் காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளை இன்னமும் தேடிக்கொண்டிருப்பவர்களைக் கூட காணாமல் ஆக்கச் செய்வார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை என தெரிவித்துள்ளார்.

