அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலைகள் மற்றும் சேவைகளின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்துள்ளன.. இதனால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை சட்டத்தரணி சங்கத்தால், இவ்விரு மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் நேற்று (25) தாக்கல் செய்யப்பட்டன.
இதனால், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தேவையான முறைமைகளை உடனடியாக தயாரிக்குமாறு பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு கட்டளையிடுமாறும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினர்களினதும் சுயாதீன நிபுணர்களினதும் ஆலோசனைகளை உடனடியாக பெற்று எரிவாயு, எரிபொருள், மின்சாரம், பால் மா, ஔடதங்கள் மற்றும் உணவுப்பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறே அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையானது, சட்டவாட்சி மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு குந்தகமாக அமையும் என அடிப்படை உரிமை மனுக்களின் ஊடாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலைமையை உடனடியாக சுமூகமாக்காவிடின், சட்டவாட்சி மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்டவர்களின் ஊடாக இந்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எவ்வித தட்டுப்பாடுமின்றி நியாயமான முறையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க முடியாமல் போகின்றமையானது, அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமையை மீறும் நடவடிக்கை என மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வித தட்டுப்பாடுமின்றி நியாயமான முறையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொடுத்து , சமத்துவம் மற்றும் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே.கனகீஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா, சட்டத்தரணிகளான சுரேஷ் ஞானராஜ் மற்றும் புலஸ்தி ஹேவாமான்ன ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழாம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று (25) ஆஜராகியிருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை, சட்ட மாஅதிபர்,மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர், சில அமைச்சுகளின் செயலாளர்கள், இலங்கை மின்சார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

