கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனல்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளமையால் , கடந்த ஒரு மாத காலமாக சுழற்சி முறையில் பல மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறான நிலையில் கடந்த வாரம் இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் நாட்டில் அனைத்து தேவைக்கும் எரிபொருள் தடையின்றி விநியோகிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் மின்துண்டிப்பு தொடர்ந்தும் அமுலிலேயே காணப்படுகிறது. கடந்த இரு தினங்களாக எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் , அவற்றுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் மின்துண்டிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் , கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையமும் மூடப்பட்டுள்ளமையால் மக்கள் மேலும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

