4 நாட்களுக்குள் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு ?

252 0

நாட்டுக்கு சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் என்பவற்றுடன் கப்பல்கள் வருகை தருவதாகவும் , நாடளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை மாற்றமடையவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 4 நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு

இந்நிலையில் எதிர்வரும் 4 நாட்களுக்குள் தற்போது எரிவாயு தட்டுப்பாடு முற்றாக மாற்றமடையும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது நாளாந்தம் நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 20 000 சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுவதாகவும் , மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவற்றுக்கான வரிசை குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வலுசக்தி அமைச்சு

இந்திய கடனுதவியின் கீழ் 35,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் போதுமானளவு எரிபொருள் காணப்படுவதாகவும் , மக்கள் அநாவசியமாக தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றமையின் காரணமாகவே நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளதாக வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

நாட்டின் பல பகுதிகளிலும் எரிவாயு மற்றும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றமையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஹட்டன் நகரத்திற்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை ஹோட்டல்களுக்கு மாத்திரமே வழங்க முடியும் என்று விநியோகத்தர்கள் கூறியமையால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

இதே வேளை கொட்டகலை நகரத்திலுள்ள லிட்ரோ வியோகத்தர் ஒருவர் சமையல் எரிவாயுவை மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஹட்டன் – கொட்டகலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய பொலிஸார் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் பொலிஸாரின் தலையீட்டுடன் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.