முசம்மில், ஜயநந்த, நிமலிடம் நட்ட ஈடு கோரும் அசாத் சாலியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

150 0

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நட்ட ஈட்டை பெற்றுத்தருமாறு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன் வைத்துள்ள கோரிக்கையை நிராகரிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (23) அறிவித்தது.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 17 (2 ) ஆம் அத்தியாயத்துக்கு அமைய முன் வைக்கப்பட்ட குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அறிவித்தார்.

தனக்கு எதிராக, மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக சி.ஐ.டி.யில் பொய் முறைப்பாடு செய்து 9 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க காரணமாக இருந்ததாக கூறி ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹம்மட் முசம்மில், ஜயநந்த வெல்லாவல, நிமல் பியதிஸ்ஸ ஆகியோரிடமிருந்து நட்ட ஈட்டை பெற்றுத் தருமாறு அசாத் சாலியால் கொழும்பு மேல் நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், அசாத் சலி கொழும்பு மேல் நீதிமன்றால் நிரபராதி எனக் கூறி கடந்த 2021 டிசம்பர் 2 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர், அசாத் சாலிக்காக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 17 (2) ஆம் அத்தியாயத்துக்கு அமைய விஷேட கோரிக்கை ஒன்றினை முன் வைத்திருந்தார்.

பொய்யான முறைப்பாட்டை வேண்டுமென்றே முறைப்பாட்டாளர்கள் முன் வைத்து, அதனூடாக அசாத் சாலியை சுமார் 9 மாதங்கள் சிறைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சட்டம் இயற்றும் உயர் சபையின் அங்கத்தவர்களான இவர்கள் துவேஷமாக நடந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு பொய் முறைப்பாடுகளைச் செய்வோருக்கு இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும், அதனால் இந்த 9 மாதங்களில் அசாத் சாலிக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக இந்த நீதிமன்றம் இழப்பீட்டு தொகை ஒன்றினை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

குற்றவியல் சட்டத்தின் 17 (2) ஆம் அத்தியாயத்துக்கு அமைய அவர் இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தார்.

இதன்போது நீதிபதி அமல் ரணராஜா, குற்றவியல் சட்டத்தின் 17 (3) ஆம் அத்தியாயத்துக்கு அமைய கூறப்பட்டுள்ள விடயங்களை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் வாதங்கள் தொடர்பில் ஆட்சேபனை உள்ளதா என சட்ட மா அதிபர் தரப்பிடம் வினவியிருந்தார். அதற்கு பதிலளித்த சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார். எனினும் அது தொடர்பில் முறைப்பாட்டாளர்களிடம் வினவுவது சிறந்தது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்தே அது தொடர்பில் வினவ, அசாத் சாலி விடுவிக்கப்பட்ட வழக்கின் 1,2,3 ஆம் சட்சியாளர்களாக பெயரிடப்பட்டிருந்த, அவருக்கு எதிராக முறைப்பாடளித்த ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹம்மட் முசம்மில், ஜயநந்த வெல்லாவல, நிமல் பியதிஸ்ஸ ஆகியோரை 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி மன்றில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அம்மூவரும் அன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

அன்றைய தினம் (பெப்ரவரி 21) வழக்கு பரிசீலிக்கப்படுகையில், சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா,

‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அசாத் சாலி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி விடுவித்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் குற்றவியல் சட்டத்தின் 17 (2) ஆம் பிரிவின் கீழ் அவர், தனக்கு எதிராக முறைப்பாடளித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நட்ட ஈடு பெற்றுத்தர கோருகின்றார். குற்றவியல் சட்டத்தின் 17 (2) ஆம் பிரிவின் கீழ் இத்தகைய கோரிக்கை ஒன்றினை முன் வைக்க முடியாது.

இந்த கோரிக்கையானது எந்த சட்ட அடிப்படையினையும் கொண்டதல்ல. எனவே இதனை நிராகரிக்க வேண்டும்.’ என கோரியிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற அறிவித்தலுக்கு அமைய மன்றில் ஆஜரான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹம்மட் முசம்மில், ஜயநந்த வெல்லாவல, நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் சர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ பிரசன்னமானார்.

அவர் நீதிமன்றில் வாதங்களை முன் வைக்கையில்,

‘இந்த விவகாரத்தில் எனது சேவை பெறுநர்கள் மட்டும் முறைப்பாடளிக்கவில்லை. பலர் முறைப்பாடளித்துள்ளனர். முறைப்பாடளித்ததும் வழக்கொன்றினை தொடுக்க சட்ட மா அதிபரால் முடியாது. அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவ்விசாரணைகளில் வழக்கொன்றினை முன்னெடுத்து செல்லத்தக்க விடயங்கள் வெளிப்பட்டாலேயே வழக்குத் தொடரலாம். அதன்படியே இவ்விடயத்திலும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான கோரிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் செவி சாய்த்தால், எதிர்க்காலத்தில் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க குடி மக்கள் பயப்படுவர். அதனால் அரசியல் நோக்கம் கருதி முன் வைக்கப்பட்டுள்ள இவ்வாறான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.’ என கோரியிருந்தார்.

இதனையடுத்து அசாத் சாலி சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன,

‘எனது சேவை பெறுநருக்கு எதிராக சட்ட மா அதிபர், இந்த விவகாரத்தின் பொலிஸ் விசாரணைகள் நிறைவடையும் முன்னரேயே வழக்குத் தாக்கல்ச் செய்தார். அப்படியானால் அரசியல் ரீதியில் செயற்பட்டுள்ளவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்ட எனது சேவை பெறுநரின் கருத்துக்களை மையப்படுத்தியே இந்த வழக்கு தாக்கல்ச் செய்யப்ப்ட்டது.

இவ்வாறான நடவடிக்கைகள் உலகில் எந்த நாட்டிலும் நடக்காது. இலங்கையில் மட்டுமே இது சத்தியம். வழக்கொன்றினை தாக்கல் செய்ய தற்போது சட்ட மா அதிபருக்கு ஒரு முறைப்பாடும், பிரதிவாதியும் மட்டுமே தேவை. அவருக்கு சாட்சிகள் அவசியமில்லை.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் செய்த பொய்யான முறைப்பாடு காரணமாக எனது சேவை பெறுநர் 9 மாதங்கள் தடுப்புக் காவலில் இருந்த நிலையில் அக்கலப்பகுதியில் அவரது வருமான இழப்பு, செலவுகள் தொடர்பில் நியாயமான நட்ட ஈடொன்றிற்கு உத்தரவிடுமாறு கோருகிறேன். ‘ என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோரியிருந்தார்.

அனைத்து தரப்பினரும் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி அமல் ரணராஜா, இந்த கோரிக்கையை முன்னெடுத்து செல்ல அனுமதிப்பத இல்லையா என்பது தொடர்பில் நேற்று மார்ச் 23 ஆம் திகதி தனது உத்தரவை அறிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்படியே நேற்று நீதிமன்றின் தீர்மானத்துக்காக வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போதே, குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதி அறிவித்தார்.