தற்போதைய அமைச்சரவை கட்டமைப்பு தொடர்பில் மன்றுக்கு அறிக்கை வேண்டும் – சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

118 0

தற்போதைய அமைச்சரவையின் கட்டமைப்பு தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று ( 23) உத்தரவிட்டது.

ஜனாதிபதியினால் தற்போதைய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவித்து அதன் செயற்பாடுகளை தடுத்து தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று (23) பரிசீலனைக்கு வந்த போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேமுனி டி சில்வாவுக்கு இந்த உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்ணான்டோ தலைமையிலான, காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

நேற்றைய தினம் இம்மனு பரிசீலிக்கப்பட்ட போது மனுதாரருக்காக மன்றில் ஆஜரகிய சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே, தற்போதைய அமைச்சரவையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு நிலுவையில் இருக்கும் போதே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அண்மையில் அமைச்சரவையில் , அதன் விடயதானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அடிப்படை மனுவை திருத்தி திருத்தல் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு கோரினார்.

அதற்படியே, அக்கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், திருத்தப்பட்ட மனுவை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டது. அத்துடன் அது தொடர்பில் ஏதும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை மே 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மன்றுக்கு சமர்ப்பிக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட நீதியரசர்கள், மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் மே 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

முன்னதாக தொழிற்சங்கவியலாளர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் கபில ரேணுகவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போது அமைச்சரவைக்கான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசியலமைப்பின் 47 ௧-அ மற்றும் ஆ சரத்துக்களுக்கு முரணானது எனக் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, சகல இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 82 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுதாரருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே, சட்டத்தரணி டிலான் மனம்பேரி ஆகியோர் ஆஜராகின்றனர்.