தமிழர்கள் மீதான அழிப்பும் ‘கர்மா’ வே இன்று சிங்களவர்களை வதைக்கின்றது – சிறிதரன்

127 0

முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் மீதும் குண்டுகளை வீசிக்கொன்ற ஜனாதிபதி  கோட்டாபாயவினதும் பிரதமர் மஹிந்த அரசினதும்  ”கர்மா” தான் இன்று சிங்களவர்களையும் வரிசையில் நிற்க வைத்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட  எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்  மீதான  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஸ்ரீதரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்,

இன்று நாட்டில் எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை,பால்மா இல்லை அத்தியாவசியப்பொருட்கள் இல்லை. மக்கள் வரிசையகளில்  பல மணிநேரம் காத்திருக்கும்  நிலை. இவ்வாறான பொருளாதா நெருக்கடியை,பொருளாதார தடைகளை தமிழ் மக்கள் 20 வருடங்களுக்கு முன்பே அனுபவித்தவர்கள் .

இன்று பரீட்சைகளை நடத்த கடதாசிகள்  இல்லை என்கின்றது அரசு. பத்திரிக்கைகளை அச்சடிக்க முடியாமல் நிறுவனங்கள் பக்கங்களை குறைத்துள்ளன. ஆனால்  தமிழ் மக்களாகிய நாம் 20 வருடங்களுக்கு முன்பே அதாவது  இந்திய இராணுவம் எமது பகுதிகளுக்குள் வந்த போது அச்சடிக்கும் தாழ்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் இலங்கை அரசின் பொருளாதார தடையின்போதும்   பரீட்சை வினாத்தாள்களை ”புல்ஸ்காப் ”தாளில்  அச்சடித்தோம். பத்திரிக்கைகளை ”புல்ஸ்காப் ”தாளிலும் சீமெந்து பேப்பரிலும் அச்சடித்தோம்.

நாம் 20 வருடங்களுக்கு முன்னர் அனுபவித்த பொருளாதார நெருக்கடிகளை சிங்கள மக்கள் இப்போதுதான் முதன் முதலாக எதிர்கொள்கின்றனர். வரிசைகளில் நிற்கின்றனர். மரணித்து  விழுகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகளையும் கர்ப்பிணிப்பெண்களையும் குண்டுகளை வீசிக்கொன்ற ஜனாதிபதி கோட்டாபாயவினதும் பிரதமர் மஹிந்தவினதும் ”கர்மா”தான் இன்று சிங்களவர்களையும் வரிசையில் நிற்க வைத்துள்ளது.அந்த கர்ம வினையைத்தான் இன்று சிங்களவர்கள் அனுபவிக்கின்றனர். அது உங்களை  சூழ்ந்துள்ளது.

பிரபாகரன் காலத்தில் யாரும் பட்டினியால் இறக்கவில்லை. வரிசைகளில் நிற்கவில்லை. மரணித்தும் விழவில்லை. ஆனால்  தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அப்பபோதைய அரசும்தான்   எமது மக்களை இனப்படுகொலை செய்தனர். சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன் இங்குள்ள சிங்கள தலைவர்கள் நேர்மையுடன் சிந்திக்க தயார் இல்லை. நீங்கள் தெரிவு செய்தவர்கள் இன்று உங்கள் மீது சவால் விடுகின்றார்கள்.

இந்த பொருளாதார தடையி 20 வருடங்களுக்கு மேல் நாம் அனுபவித்தவர்கள். ஒரு சீமெந்துக்கு, ஒரு கம்பிக்கு ,பெற்றோலுக்கு ,உணவு பொருட்களுக்கு, பால்மாவுக்காக துன்பங்களை சந்தித்தவர்கள் தமிழர்கள். இப்போதுதான் நீங்கள் இதனை சந்திக்கின்றீர்கள். வரிசைகளில் நிற்கின்றீர்கள். இதுவரை வரிசைகளில் நின்ற 4 பேர் இறந்துள்ளனர். இது இந்த நாட்டுக்கு வெட்கமில்லையா? கேவலமில்லையா?

இதே விடயங்கள் எங்களது பகுதிகளில் நடக்கும் காலத்தில் விமானக் குண்டுகளுக்கும் பொஸ்பரஸ் குண்டுகளுக்கும் எறிகணைகளுக்கும் கொத்தணிக்குண்டுகளுக்கும் தமிழர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் அதனை ஒரு நாட்டின் விடுதலையாக, தேசத்தின் விடுதலையாக இனப்படுகொலையை மறைத்து செய்த இலங்கை  அரசு இன்று அதனது விளைவுகளை அனுபவிக்கின்றது.

இந்த நாட்டில் தமிழ் தேசிய இனம் ,சிங்கள தேசிக்காய் இனம் என்ற இரு இனங்கள் உண்டு. இவ்விரு இனங்களையும் அரவணைத்து செல்லும் ஒரு தலைவன் வராதவரை இதனைவிடவும் மோசமான நிலைகளை நாடு எதிர்கொள்ள நேரிடும். நாடு அதலபாதாளத்துக்குள் விழும்.

அதிகாரங்களை பகிர்ந்து சமஸ்டி அடிப்படையில் தீர்வினை வழங்க கூடிய ஒரு சிங்கள தலைமகன் என்று வருகின்றானோ அன்றுதான் நாடு மீளும் . அந்த சிங்களமகன் மகா மனிதனாக மாறுவான். அவ்வாறான ஒரு சிங்கள மகனை உருவாக்க சிங்கள  மக்கள் முன்வரவேண்டும்  என்றார்.