தேர்தல் வரும் போது தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

142 0

தற்போது அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்தவித பிரத்தியேக திட்டமும் இல்லை என்று முன்னா அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தேர்தல் வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமினில் விடுதலையான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இன்று நான்காவது முறையாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

இவ்வழக்கில் அமைச்சர் ஜெயக்குமாருடன் கைதான அ.தி.மு.க. நிர்வாகிகளான சென்னையை சேர்ந்த இளைஞர் பாசறை மாவட்டச்செயலாளர் காளி என்ற பரமேஸ்வரன் (46), ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் டெல்லி ராஜ் (37) ஆகியோரும் திருச்சியில் தங்கியிருந்து இரண்டு வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

கோர்ட்டு உத்தரவுப்படி அவர்களும் இன்று திருச்சி கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தனித்தனியாக ஆஜராகி கையெழுத்திட்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு என பிரத்தியேகமாக ஒருங்கிணைந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தார். ஆனால் தற்போது அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்தவித பிரத்தியேக திட்டமும் இல்லை. மீன்வளத்துறை, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை போன்ற இதர துறைகளின் நிதியை வேளாண் பட்ஜெட்டில் சேர்த்து விவசாயிகளை ஏமாற்றும் வேலையை செய்து உள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிள், லேப்டாப் என 16 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக ஒரு ஏழைப்பெண் திருமணத்தின் போது ரூபாய் 1 லட்சம் அளவுக்கு பயன் அடைந்து வந்தனர். இதற்காக 5,000 கோடி நிதியை அ.தி. மு.க. அரசு ஒதுக்கியது.

ஆனால் இன்றைக்கு அரசுப்பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஒரு ஆயிரம் தருவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம் 5 லட்சம் பேர் மட்டுமே பயன் அடைகிறார்கள். ஆனால் 2 கோடியே 14 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் தருவதாக கூறிவிட்டு தராமல் இருக்கிறார்கள். இந்த ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தேர்தல் வரும்போது தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.