அரசு சிங்கள மக்களை இனியும் ஏமாற்ற முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

257 0

தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தைத் தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம், பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாதெனவும் அந்த காலம் முடிந்துவிட்டது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவிருப்பதாகச் செய்தி வெளியாகியிருந்தது. மக்கள் சொல்வதை ஜனாதிபதி கேட்காத காரணத்தினால் ஜனாதிபதி சொல்வதை மக்கள் கேட்கக்கூடாது எனக்கூறி ஜனாதிபதியின் உரையின் போது தொலைக்காட்சிப் பெட்டியை மூடி வைத்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.

நானும் ஜனாதிபதியின் உரையைக் கேட்கவில்லை. வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து விசேடமாக எந்த விடயங்களையும் கூறவில்லை என்றே விளங்குகிறது.

இன்னும் இரண்டு வருடங்கள் தயவு செய்து தாருங்கள் என்று மக்களிடம் கேட்பதாகவே தென்படுகின்றது. ஆகவே ‘நாட்டை பாதுகாப்போம் நாட்டை மீட்போம்’ என்ற மீட்பர்கள் ஒரு வருடம் தாருங்கள், இரண்டு வருடங்கள் தாருங்கள் என்ற கெஞ்சிக் கொண்டு உள்ளனர்.

தற்போது மக்கள் பசிக்கு உணவு இல்லாத நிலையில், இனியும் இனவாதத்தைத் தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம், பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என்று கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது. அந்த காலம் முடிந்துவிட்டது என்றார்.