வேலைத்திட்டங்களை முன்வையுங்கள் : சந்தர்ப்பவாத அரசியல் வேண்டாம் – மைத்திரிபால

173 0

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பதற்கு அனைத்து கட்சிகளும் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தமது வேலைத்திட்டங்கள் , யோசனைகளை முன்வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே எமது வேலைத்திட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று எவரேனும் கூறுவார்களாயின் அது சந்தர்ப்பவாத அரசியலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சுதந்திர கட்சியின் தேவையை மக்கள் உணர்ந்துள்ளனர். தற்போதுள்ள எதிர்க்கட்சி என்ன செய்கிறது, எதைக் கூறுகின்றது என்பது எமக்கு தெளிவின்றியுள்ளது.

ஆனால் சு.க. அவ்வாறன்றி கொள்கை அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது தற்போதைய தேவை அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல. மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்பதாகும்.

மக்கள் பெரும் கோபத்துடனுள்ளனர். எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றும் கொள்கை சுதந்திர கட்சிக்கு கிடையாது. பாரிய தீப்பிழம்பிற்கு மத்தியில் சிக்கித்தவிக்கும் நாட்டை அதிலிருந்து மீட்பதே தற்போதைய அத்தியாவசிய தேவையாகவுள்ளது.

எமக்கு வீதிக்கிறங்கி போராட முடியும். எனினும் அவ்வாறு செய்வதன் மூலம் நாடு மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்ளும்.

தற்போது ஜனாதிபதி யார் , பிரதமர் யார் , யார் ஆட்சி செய்வது என்பது எமக்கு அவசியமல்ல. அரசியல் அதிகாரத்திற்கு அப்பால் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

எனவே நாட்டை உண்மையாக நேசிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு நெருக்கடிகளுக்கான தீர்வினை முன்வைக்க வேண்டும். அதனை விடுத்து யோசனைகளை மறைத்து வைத்துக் கொண்டு , நாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே வேலைத்திட்டங்களை முன்வைப்போம் என்று கூறுவது சந்தர்ப்பவாத அரசியலாகும்.

அது மாத்திரமின்றி தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச அரசியல் தொடர்புகளை வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். அவ்வாறன்றி பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

வீதிக்கிறங்கி கூச்சலிட்டுக் கொண்டிருப்பதும் பொறுத்தமற்றது. மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட சுதந்திர கட்சி தயாராகவே உள்ளது என்றார்.