மெரீனா புரட்சி நடத்தி ஜல்லிக்கட்டை வென்றெடுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நினைவாக இளைஞர்கள் காளையை அடக்கும் நினைவு சின்னம் ஒன்றை அங்கு அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நேற்று இரவு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த வந்த இந்தி மொழியை தடுத்து நிறுத்த போராடியவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நடைபெற்று வருகிறது.
1965 ஆம் ஆண்டு மொழியை காப்பாற்ற நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் தமிழ் மொழிக்காக அன்று மொழிப்போரில் ஈடுபட்டு தமிழ் மொழியை காப்பாற்றிய மாணவர்கள், இன்றைக்கு தமிழ் கலாச்சாரமான ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி பெற்று உள்ளார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை அறவழியில் நடத்திய மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

