மரியுபோல் நகரில் 500 மக்களை பணய கைதிகளாக பிடித்துள்ள ரஷிய படை

283 0

மரியுபோல் நகரில் உள்ள மருத்துவமனையை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் சுமார் 500 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல், ரஷிய ராணுவத்தின் தாக்குதலால் உருக்குலைந்து இருக்கிறது. அங்கிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களை ரஷிய படைகள் தடுப்பதாக அந்நகர மேயர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில் மரியுபோல் நகரில் பொது மக்கள் 500 பேரை ரஷிய ராணுவம் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து பிராந்திய தலைவர் பாவ்லோ கைரி லேன்கோ கூறும்போது, ‘‘மரியுபோல் நகரில் உள்ள மருத்துவமனையை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் சுமார் 500 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதில் 100 டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் சிக்கி உள்ளனர்.

ஆஸ்பத்திரியை கைப்பற்றியுள்ள ரஷிய படை, அங்குள்ளவர்களை மனித கேடயங்களாக பயன் படுத்தி யாரையும் உள்ளே அனுமதிக்காதபடி செயல் படுகின்றனர்’’ என்றார்.

இதற்கிடையே கடும் தாக்குதல் நடந்து வரும் மரியுபோல் நகரில் இருந்து நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கிய நாள் முதல் நேற்று தான் மரியுபோல் நகரில் இருந்து அதிகம் பேர் வெளியேறி உள்ளனர்.