யாழில் இளைஞர் யுவதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி

387 0

யாழ்ப்பாணத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் வழங்கும் இரு வார செயல்திட்டம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை  முதல்  ஆரம்பமாகியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பிரதேசங்களிலேயே அதிக தொற்றாளர்களும் மரணங்களும் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாது, தடுப்பூசியை காலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.

எனினும் கவலைக்கிடமான வகையில் யாழ். மாவட்டத்தில் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை யாழ் மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 25 வீதமானவர் மட்டுமே தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.