தடுப்பு கட்டையில் கார் மோதல்- தி.மு.க. எம்.பி. மகன் விபத்தில் பலி

135 0

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் தி.மு.க. எம்.பி.மகன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கீழ்புத்துப்பட்டு பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இன்று அதிகாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து புதுவை நோக்கி சென்ற ஒரு சொகுசுகார் திடீரென நிலை தடுமாறி அந்த பகுதியில் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இதனால் அந்த சாலையில் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் சிக்கிய காருக்குள் 2 வாலிபர்கள் உடல் நசுங்கி கிடந்தனர். ஆனால் கார் உருக்குலைந்து கிடந்ததால் அவர்களை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து மரக்காணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து 2 பேரையும் மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதனால் வெல்டிங் மெஷின் கொண்டுவரப்பட்டு காரை வெட்டி எடுத்து இருவரது உடல்களையும் மீட்டனர். அதில் ஒரு வாலிபர் ஏற்கனவே இறந்துகிடந்தார். மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் வந்த 2 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்த வாலிபர் பெயர் ராகேஷ் (வயது 21) என்பதும், இவர் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் என்பதும் தெரியவந்தது.

உயிருக்கு போராடி சிகிச்சை பெற்றுவரும் மற்றொருவர் ராகேஷின் நண்பரான சட்டக்கல்லூரி மாணவர் வேதவி காஷ் என்பதும் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து தி.மு.க. எம்.பி. என்.ஆர். இளங்கோவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் தனது குடும்பத்தினருடன் புதுவைக்கு விரைந்த வண்ணம் உள்ளார்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.