உக்ரைனில் இருந்து புறப்பட்டதில் இருந்து கோவைக்கு வரும்வரை எங்களுக்கு எந்தவித செலவும் இல்லை. நாங்கள் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கு எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லபடியாக உதவின.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் உடுமலை கச்சேரி வீதியில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது மகன் அஸ்வந்த். இவர் உக்ரைன் கார்கிவ் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் உக்ரைன் மீது ரஷியா போர்தொடுத்ததால் அஸ்வந்த் ஊர் திரும்ப முடியாமல் உக்ரைனில் சிக்கி தவித்து வந்தார்.
இந்தநிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அந்தவகையில் மாணவர் அஸ்வந்த் இந்திய விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து கோவைக்கு வந்தார். பின்னர் உடுமலை வந்த அவரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
உடுமலைக்கு திரும்பி வந்த மாணவர் அஸ்வந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
நானும் எனது நண்பர்களும் உக்ரைனில் கார்கிவ் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தோம். உக்ரைன் மீது ரஷியா விரைவில் போர் தொடுக்கும் என்று கூறப்பட்டது. கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. இன்னும் 3 செமஸ்டர் எழுத வேண்டியிருந்தது. அதை எழுதி விட்டால் படித்து பட்டம் பெற்று விடலாம் என்று கருதியிருந்தோம்.
இந்தநிலையில் போர் பதற்றம் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதனால் இந்தியா திரும்ப கருதினோம். ஆனால் விமான டிக்கெட் கிடைக்கவில்லை. அத்துடன் விமான டிக்கெட் கட்டணமும் அதிகரித்து வந்தது. எனக்கு 25-ந்தேதி அதிகாலையில் கீவ் நகரில் இருந்து புறப்பட விமான டிக்கெட் கிடைத்தது.
ஆனால் 24-ந்தேதி காலையில் ரஷியா போர் தொடுக்க தொடங்கியதால் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் போனது. அதனால் நாங்கள் அந்த அப்பார்ட்மெண்ட்டிலேயே பதுங்கு குழியில் பாதுகாப்பாக தங்கி இருந்தோம். அந்த நேரத்தில் பிரட், பிஸ்கெட் ஆகியவற்றை வாங்கி வந்து வைத்துக்கொண்டோம்.
நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து 500, 600 மீட்டர் தூரத்தில் குண்டுகள் விழுந்தது. அப்போது அந்த பகுதியை விட்டு பாதுகாப்பாக வெளியேறும்படி இந்திய தூதரகத்தில் இருந்து தகவல் வந்தது. சில மணிநேரம் போர் நிறுத்தம் இருந்த நேரத்தில் 28-ந்தேதி அங்கிருந்து நடந்து நண்பர் வீட்டுக்கு சென்றோம். அங்கிருந்து வாடகை காரில் ரெயில் நிலையத்திற்கு சென்றோம். ரெயில்களில் உக்ரைனை சேர்ந்தவர்களை மட்டுமே, அதுவும் பெண்களை மட்டுமே ஏற்றிச் சென்றனர்.
அதன்பிறகு அங்கிருந்து 4-ந்தேதி நடந்தே புறப்பட்டோம். 15கி.மீ.தூரம் நடந்து வந்து எல்லைப்பகுதியில் உள்ள பெசோசின் வந்து சேர்ந்தோம்.அங்குஉக்ரைன் ராணுவத்தினர் இருந்தனர். அங்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கியிருந்தோம். 4வது நாள் அங்கிருந்து பஸ்சில் ருமேனியாவிற்கு அழைத்து சென்றனர். ருமேனியாவில் எங்களை நல்லபடியாக கவனித்துக்கொண்டனர்.
அங்கிருந்து 7-ந்தேதி எங்களை இந்திய விமானம் அழைத்து வந்தது. அந்த விமானம் 8-ந் தேதி காலை 4 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. அங்கிருந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை போலீஸ் வாகனத்தில் தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து சென்றனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்ட விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 29 பேர் புறப்பட்டு கோவை வந்தோம்.
உக்ரைனில் இருந்து புறப்பட்டதில் இருந்து கோவைக்கு வரும்வரை எங்களுக்கு எந்தவித செலவும் இல்லை. நாங்கள் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கு எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லபடியாக உதவின. கோவைக்கு எனது பெற்றோர் வந்து மகிழ்ச்சியுடன் என்னை உடுமலைக்கு அழைத்து வந்தனர்.
இவ்வாறு அஸ்வந்த் கூறினார்.

