எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்த ரிட் மனு – விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்

266 0

பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகித்தமையை மையப்படுத்தி உரிய விசாரணைகளுக்கு உத்தரவிடக் கோரி  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  கடந்த 2021 டிசம்பர் 8 ஆம் திகதி  தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை ( ரிட்) விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக புதன்கிழமை (9) நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து உத்தர்வை  வழங்குவதற்காக அம் மனு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான கலாநிதி ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயசிங்க ஆகியோர் அடங்கிய  நீதிபதிகள் குழாம் இந்த தீர்மானத்தை  அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அடங்கலாக 04 பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவித்தலும் அனுப்பட்டது.

மனுதாரர் மற்றும் சம்பவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் இந்த அறிவித்தலை பிறப்பித்துள்ளனர்.

முன்னதாக பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகித்தமையை மையப்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  கடந்த ஜனவரி  8 ஆம் திகதி  இந்த எழுத்தாணை மனு ( ரிட்)தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘ விநிவித பெரமுன’ வின் பொதுச் செயலரும் சமூக செயற்பாட்டாளருமான  நாகானந்த கொடித்துவக்கினால் இந்த  மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் தற்போதும், பாவனையாளர்களிடம் உள்ள, அரைவாசி பயன்படுத்தப்பட்டுள்ள  எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்று, அது தொடர்பில் குறிப்பிட்ட ஒரு தொகையை பாவனையாளர்களுக்கு பணமாக வழங்கப்படல் வேண்டும் என  கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.