உலக மகளிர் தினமும் தமிழீழப் பெண்களும் – மகளிர் அமைப்பு டென்மார்க்.

258 0

உலக மகளிர் தினமும் தமிழீழப் பெண்களும்

“மார்ச் 08, உலக மகளிர் நாளாகும்“ உலகப் பெண்களுக்கே வழிகாட்டியாக உயர்ந்து நின்ற எமது பெண்கள் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் அனைத்து துறைகளிலும் தம்மை வளர்த்து, தமிழ் தேசிய உணர்வுகளையும் கட்டியெழுப்பி, பெண் எழுச்சிக்கு வித்திட்டவர்கள். ஆனால் இன்று தமிழீழத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. அதற்கு சூழ்ச்சியாளர்கள் சமூகப்பிரச்சனைகளை உருவாக்கி, ஆளுமை சிதைந்த அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை வழிநடத்திச் செல்கின்றார்கள்.

போரினாலே வாழ்க்கைத் துணைவர்களை இழந்ததாலும், போரினாலே வாழ்க்கைத் துணைவர்கள் அங்கவீனர்களாகி விட்டதாலும் குடும்ப பாரத்தை சுமக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்லாயிரம். எனினும் இராணுவத்தாலும், இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் இன்றும் எமது தாயகத்தில் பெண்கள் அனுபவிக்கும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான ஒடுக்கு முறைகள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.

தமிழீழத்தில் பெண்கள், யுவதிகள் மற்றும் சிறுமிகள் மீதான வன்புணர்வு படுகொலைகள் பல நன்கு திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிங்கள படைகளாலும், இந்தியப் படைகளாலும் மிக மோசமாக தமிழீழப் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் 2009 இல்சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் பெண்களை கைது செய்து பாலியல் அடிமைகளாக வைத்து துன்புறுத்தி உள்ளனர். பெண்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த போதும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவற்றுக்கான நீதி இது வரைக்கும் கிடைக்கவில்லை என்பது மிகப் பெரும் வேதனையாக உள்ளது.

நாங்கள் வாழும் புலம் பெயர் நாடுகளில் யாராக இருந்தாலும் குற்றம் செய்தால் அதற்குரிய தண்டனை வழங்கப்படும். ஆனால் சிறிலங்காவில் குற்றம் செய்தவர்கள் உயர் பதவிகளிலும், நாடு நாடாக சுதந்திரமாக சுற்றி திரிந்து சுக போக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் எங்கள் தமிழ் மக்கள் ஒரு குற்றமும் செய்யாமல் அரசியல் கைதிகளாக சிறைகளில் வாழ்கிறார்கள். அதனால் தான் எங்கள் உரிமைகளுக்காக போராடினோம், போராடிக்கொண்டு இருக்கிறோம். நாங்களும் மற்ற இனத்தவர்கள் போல சுதந்திரமாகவும், கௌரவமாக வாழ எங்களுக்குரிய நாடு தமிழீழமே.

அங்கே வாழும் பெண்கள் தமக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். இன்று ஒரு பெண் பிள்ளை தெருவில் தனியாக நடந்து செல்ல முடியாத ஒரு நிலை ஈழத்தில் உருவாகியுள்ளது. இதனால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருடைய மனங்களிலும் எங்களைக் கட்டி காத்து, பாதுகாப்பு தந்தவர்கள், எப்பொழுது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கம் இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

2009 இல் பல உலக நாடுகள் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து செய்த சதியால் எம்மவர்களின் ஆயுதங்கள் மௌனித்தன. அதன் பின் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை நடாத்தி வருகிறார்கள். அவர்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. தன் பிள்ளைகளை காணாது தேடியலைந்த பெற்றோர்கள் எத்தனையோ பேர் உயிரிழந்து விட்டனர். எனவே இவர்களுக்கான விரைவான தீர்வொன்றை சர்வதேசத்திடம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

எமது உயிரிலும் மேலான தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் ஈழத்தமிழர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் வீறு கொண்டெழுந்து போராடி எமது மண்ணில் விதைகளாக வீழ்ந்த எமது வீராங்கனைகள் ஆயிரம் ஆயிரமாய் எமது உள்ளக் கமலங்களிலே உன்னதமான இடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்துவதற்கு கூட மக்களிற்கு (தாய், மனைவி, சகோதரி) அனுமதி இல்லை. இது ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமையை மதிக்காமல் தமிழ் மக்கள் மீது அரச அடக்கு முறையை பாவித்து, தொடர்ந்தும் இன அழிப்பைச் செய்து வருகின்ற சிங்கள அரசை, இன்றைய நாளில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமது உரிமைக்கான குரலை இழந்து, பலவீனப்பட்டு நிற்கும் எமது தாயகப் பெண் குலத்தின் விடுதலைக்காக, அவர்களது சுதந்திரம் மிக்க சுபீட்சமான எதிர்காலத்திற்காக உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். 2009 ம் ஆண்டு மே மாதத்துடன் எமது மக்கள் சுவாசித்த சுதந்திரக்காற்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. அந்த சுதந்திரக்காற்றை எமது மக்கள் மீண்டும் சுவாசிக்க வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் அயராது உழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

“தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி
மகளிர் அமைப்பு டென்மார்க்