குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தரை, ஆகாயம் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளிடம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக நுழைவாயிலில் தீவிர வாகன சோதனைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் கடற்படை, கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் கப்பல், படகுகள் மற்றும் ஹெலிக்காப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக காந்தி சிலை அருகே சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் இரவு நேரங்களில் ஒவ்வொரு காவல் மாவட்ட துணை கமிஷனர் மேற்பார்வையில் போலீசாரின் தீவிர ரோந்து பணி நடந்து வருகிறது.

