சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி: ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன்

254 0

சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியை காண்பதற்காக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமனோர் திரண்டனர்.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் பிரசித்திபெற்றது. இந்த மாசி அமாவாசை அங்காளம்மனுக்கு உகந்தது என்பதால் பக்தர்கள் அங்காளம்மன் வேடம் அணிந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.இது நிகழ்வு சேலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
மயான கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு சேலம் செவ்வாய்ப்பேட்டை, கிச்சிப்பாளையம், நாராயண நகர், கருங்கல் பட்டி, களரம்பட்டி, அம்மாப் பேட்டை, ஜான்சன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் 15 நாட்களுக்கு மேலாக கடும் விரதம் இருந்து அமாவாசை இரவு முழுவதும் விடிய, விடிய அங்காள அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இன்று மதியம் அவர்கள் அம்மன் வேடமணிந்து ஆடு, கோழி, கடித்தபடி ஊர்வலமாக மயானத்திற்கு புறப்பட்டனர். அப்போது பொதுமக்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் அவர்கள் செல்லும் வழியில் குறுக்கே படுத்து கொண்டனர்.
அவர்களை அம்மன் வேடமணிந்து வருபவர்கள் தாண்டி சென்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மயானத்தில் பூஜை செய்து விட்டு சென்றனர்.
இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமனோர் திரண்டனர். அவர்கள் மயானங்களில் குவிந்து காணப்பட்டனர்.
விழாவில் அசம்பா விதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்தந்த மயான பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.