மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க ‘நான் முதல்வன்’- புதிய திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

457 0

நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள லச்சினையையும் வெளியிட்டார்.

மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பாடநூலை வெளியிட்டு, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

 

 மு.க.ஸ்டாலின்

 

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.

தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சிக் கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோடிங் மற்றும் ரொபாடிக்ஸ் போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.

இதற்கென தனியே கலைத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலை வாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.

முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை ஒருங்கிணைக்கும். மேலும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும்.