நடுரோட்டில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகள்

267 0

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடுரோட்டில் மாணவிகள் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து பள்ளி திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு நேரடி வகுப்பில் பாடம் படித்து வருகிறார்கள்.

பள்ளிகள் திறந்ததை தொடர்ந்து மாணவர்கள் பஸ்களில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி செல்லும் சம்பவம் அதிகரித்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சார ரெயிலில் பயணம் செய்த மாணவனும் மாணவியும் தொங்கியபடி பிளாட்பாரத்தில் கால்களை உரசி சென்ற வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அழைத்து எச்சரித்தார். மேலும் மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும் காலை நேரத்திலும் மற்றும் மாலை நேரத்திலும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடுரோட்டில் மாணவிகள் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் இடத்தில் மாணவிகள் கூச்சலிட்டபடி பிறந்தநாளை கொண்டாடினர். இதனை கண்ட பொதுமக்கள் மாணவிகளின் செயல்களை கண்டித்தனர். ஆனால் இதனை மாணவிகள் கண்டு கொள்ளவில்லை.

மாணவிகளின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து அறிந்தது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.