முறையான ரசீது இன்றி கொண்டுவரப்பட்ட 6 கிலோ 830 கிராம் தங்க நகைகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து இருப்பது தங்க வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் இருந்து திருச்சி வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. இதற்கிடையே சமீப காலமாக மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து கண்காணிக்கும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கடத்தல்காரர்களை பிடித்து, புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து வருகி றார்கள்.
இந்த நிலையில் முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது எஸ்6 என்ற பெட்டியில் ஆய்வு நடத்தியபோது கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த அமீர்பான் முகர்ஜி (வயது 50), பிரதீப் முகர்ஜி (45) மற்றும் திருச்சியைச் சேர்ந்த அருணன் (40) ஆகிய 3 பேரும் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் 6 கிலோ 830 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தங்களது அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் தீவிர விசாரணை நடந்தது.
இதில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள பிரபல நகை கடைக்கு வியாபாரத்திற்காக அந்த நகைகளை எடுத்துச் செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த தங்க நகைகளுக்கான வரி செலுத்தப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும் முறையான அனுமதி இல்லாமலும் வரி செலுத்தப்படாமலும் தங்க நகைகளை கொண்டு வந்தது வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பின்னர் அந்த வாலிபர்களிடம் இந்த நகைகளுக்கான வரி ரூ.17 லட்சத்து 28 ஆயிரத்து 356 பணம் செலுத்த வேண்டும் பணத்தை செலுத்தி விட்டால் நகையை தங்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று தெரிவித்தனர்.
முறையான ரசீது இன்றி கொண்டுவரப்பட்ட 6 கிலோ 830 கிராம் தங்க நகைகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து இருப்பது தங்க வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

