அ.தி.மு.க.- த.மா.கா. கூட்டணி தோல்வி தற்காலிகமானது: ஜி.கே.வாசன்

209 0

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., த.மா.கா. கூட்டணியின் தோல்வி தற்காலிகமானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க, த.மா.கா. கூட்டணியின் தோல்வி தற்காலிகமானது. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவின் வெற்றிக்கு சரியான காரணங்களும் உண்டு. தவறான காரணங்களும் உண்டு.

அதாவது கூட்டணி கட்சிகளுக்குள் ஒதுக்கிய இடங்களின் பங்கீடு. மேலும் ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றால் பெற்ற பெருவாரியான வெற்றி.

த.மா.கா.வுக்கு குறைவான எண்ணிக்கையில் கூட்டணியில் வாய்ப்பு கிடைத்தாலும், கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

கூட்டணி கட்சிக்குள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்த கட்சியாக த.மா.கா விளங்குகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., த.மா.கா. கூட்டணியின் தோல்வி தற்காலிகமானது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க, த.மா.கா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் த.மா.கா. சார்பில் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

த.மா.கா தொடர்ந்து மக்கள் பணியையும், இயக்கப் பணியையும் வலுப்படுத்தும். வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.