நடைமுறை அரசியல் கலாசாரங்களில் மாற்றமில்லை என்றால் எம்மாலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – சரத்

242 0

தமக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் மக்கள் மாற்று வழியில் சிந்திக்காவிட்டால், எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்காமல் தேர்தல் முறைமைகளிலும், அரசியலமைப்பிலும் மாற்றங்களை செய்து கொண்டிருப்பது பிரயோசனமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடங்கஸ்லந்த – ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டிலுள்ள நிலைவரத்தின் அடிப்படையில் காகங்களுக்கு மாத்திரமே வாழக்கூடிய சூழல் காணப்படுகிறது. மக்களுக்கு வாழ முடியாத நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. நாம் எதிர்கால பயணம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் இடம்பெறக் கூடும் என்று நான் அனுமானிக்கும் விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கின்றேன். அவற்றை ஏற்றுக் கொள்வதெனில் ஏற்றுக் கொள்ள முடியும். அவ்வாறில்லை எனில் நிராகரிக்க முடியும்.

நாட்டின் பொருளாதார நிலைமை பூச்சிய நிலைமையை அடைந்து , அனைவரும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். சிலர் பாராளுமன்றத்திற்கு தெரிவானதன் பின்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர். இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் மக்களே.

எனவே தமக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்யும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றாமல் , அரசியலமைப்பினையோ தேர்தல் முறைமையினையோ மாற்றுவதில் எவ்வித பிரயோசனமும் கிடையாது.