அரசாங்கத்திலிருந்து வெளியேறி தேவையற்ற அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்த தொழிலமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா, அரசாங்கத்தின் குறைகளை நிவர்த்தி செய்து ஒன்றிணைந்து செயற்படவே எதிர்பார்த்துள்ளோம் என்றும் கூறினார்.
கெப்படிப்பொல பகுதியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் செயற்பாட்டு குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் ஊடாக கூட்டணியமைத்தது. தேர்தல் இடம்பெற்று ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சுதந்திர கட்சி ஆற்றிய சேவை கவனத்திற்கொள்ளப்படவில்லை.
கூட்டணி அரசாங்கம் என்ற ரீதியில் மிகுதியாக உள்ள காலப்பகுதியில் தவறுகளை திருத்திக்கொண்டு ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம். அரசியல் ரீதியில் அவசர தீர்மானங்களை முன்னெடுத்து அரசாங்கத்தையும், ஆதரவாளர்களையும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.
சுதந்திர கட்சியை விட்டு ஐக்கிய தேசிய கட்சியுடனும் ,மக்கள் விடுதலை முன்னணியினருடனும் ஒன்றினைய முடியாது. நாட்டு நிர்வகிக்கும் தகைமை மக்கள் விடுதலை முன்னணியினருக்கு கிடையாது என்றும் அவர் கூறினார்.

