போராட்ட கும்பலை எதிர்த்து போராடிய 2 இளம்பெண்கள்- திருவான்மியூரில் பரபரப்பு

277 0

திருவான்மியூர் மார்க்கெட் ரோட்டில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட சண்டையால் திடீரென்று மறியலில் சிலர் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

தேர்தல் என்றாலே அடி தடி, சண்டை சச்சரவுகள், மோதல், மறியல், போராட்டம் என்பதெல்லாம் வழக்கமாக நடப்பதுதான். அதனால் தான் அன்றைய தினத்தில் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பலர் வெளியே செல்வார்கள்.

இல்லாவிட்டால் வெளியே செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டுக்குள் முடங்கிவிடுவார்கள். வெளியே சென்றால் ஏதாவது பிரச்சினைகளில் சிக்க நேரிடும் என்ற பயம் தான் அவர்களுக்கு.

நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தாலும் சில இடங்களில் சிறு சிறு பிரச்சினைகள் நடக்காமல் இல்லை.

திருவான்மியூர் மார்க்கெட் ரோட்டில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட சண்டையால் திடீரென்று மறியலில் சிலர் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 இளம்பெண்கள் வந்தனர். போராட்டம் நடந்ததால் அவர்களால் அந்த இடத்தை கடப்பதில் சிரமம் ஏற்பட்டது. வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு ரோட்டின் ஓரமாக செல்ல முயன்றனர்.
மோட்டார் சைக்கிளில் செல்லும் இளம்பெண்கள்

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் வண்டியை செல்லவிடாமல் மறித்தது. அந்த பெண்கள் அவர்களிடம் அவசரமாக செல்ல வேண்டும். ப்ளீஸ்… கொஞ்சம் வழிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. திரும்பிப்போம்மா… போராட்டம் நடப்பது தெரியவில்லையா? என்றனர். அதை கேட்டதும் அந்த பெண்கள் இருவரும் ஆவேசம் அடைந்தனர்.

நீங்கள் உங்கள் உரிமைக்காக போராடுகிறீர்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ரோட்டில் போவது எங்கள் உரிமை. அதை எப்படி தடுக்கலாம் என்றனர்.

நூற்றுக்கணக்கான ஆண்கள் மத்தியில் 2 இளம்பெண்கள் எதிர்த்து நின்றதை பார்த்ததும் பார்ரா…. என்ன பேச்சு பேசுராங்க…. என்றபடி அவர்கள் மீது தங்கள் கோபத்தை காட்டத் தொடங்கினார்கள்.

சிலர் வண்டியை எட்டி உதைத்தனர். உடனே பின்னால் இருந்த பெண் கீழே இறங்கி அவர்களை எதிர்த்து ஆவேசமாக கத்தினார்.

நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையிலும் கொஞ்சம் கூட பதட்டமும், பயமும் இல்லாமல் அந்த பெண்கள் எதிர்த்து போராடினார்கள். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த மனிதாபிமானம் கொண்ட ஒன்றிரண்டு இளைஞர்கள் அந்த பெண்களை பத்திரமாக அங்கிருந்து அனுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதற்கிடையில் கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் கிடைத்த சரக்கை ஊற்றிக் கொண்டு ஆட்டம்போட்டுக் கொண்டிருந்த சிலர் அந்த பெண்களை கையை பிடித்து தள்ளியும், துப்பட்டாவை இழுத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் கூடுதல் ஆவேசம் அடைந்த அந்த பெண்கள் கையை உயர்த்திக் கொண்டு அவர்களை நோக்கி பாய்ந்தனர். வம்புக்கு இழுத்தவர்களிடம் தெம்புடன் மோதினார்கள்.

இப்படி அந்த பெண்கள் துணிச்சலுடன் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வந்து 2 பெண்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். ஆனாலும் சீற்றம் தணியாத அந்த பெண்கள், ‘ரோடு என்ன அவர்களுக்கு சொந்தமா? வண்டியை உதைக்கிறாங்க, அடிக்க வர்ராங்க, இவங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது’ என்று கேட்டபடியே டீ-சர்ட் காலரை தூக்கிவிட்டபடி கெத்தாக வண்டியில் ஏறிச்சென்றார்கள் சிங்கப்பெண்கள்.