உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் வன்முறை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

274 0

சென்னை, கோவை மாநகராட்சிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சூறாவளி பிரசாரம் செய்தார்.

இதையடுத்து நேற்று வாக்குப்பதிவையொட்டி அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி கட்சி நிர்வாகிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்களிடம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எவ்வாறு நடைபெறுகிறது?. அங்கு அ.தி.மு.க.வினர் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?, அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று முறையாக பார்வையிடுகிறார்களா? என கேட்டறிந்தார். மேலும் தேர்தல் தொடர்பான பணிகளை முன்னின்று கவனிக்குமாறு அவர்களை முடுக்கி விட்டார்.

இந்த நிலையில் இன்று காலை ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எவ்வாறு நடைபெற்றது? ஆங்காங்கே நடைபெற்ற பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

இதையடுத்து வருகின்ற 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் அங்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிப்பதற்காக முகவர்களுக்கு என தனியாக அமைக்கப்பட்ட அறையில் இருந்து இரவு, பகல் பாராமல் அ.தி.மு.க. முகவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தேர்தல் முடிவுகள் அறிவுக்கப்பட்ட உடன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறி விடக்கூடாது. வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் பூட்டி சீல் வைத்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும் வரை பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி, சென்னை மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன.

குறிப்பாக சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற பல பூத்களில் கள்ள ஓட்டுக்களை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்கள் தோல்வியுற்று விடுமோ என பயத்தின் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இப்படி கள்ள ஓட்டுக்களை வாக்குச்சாவடிகளுக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து பதிவு செய்து இருக்கின்றார்கள். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் இருந்த காவல் துறை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கவில்லை. காவல் துறையினர் முன்பாகவே தி.மு.க.வை சேர்ந்தவர்கள், அவர்களுடைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பணம் பட்டுவாடா செய்தார்கள். இவையெல்லாம் காவல்துறை அதிகாரிகளுடைய கண் முன்னாடியே நடந்தது. அ.தி.மு.க. நிர்வாகிகளும், பொதுமக்களும் எவ்வளவோ சுட்டி காட்டியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

சென்னை மாநகராட்சியில் திருவல்லிக்கேணி தொகுதி 114-வது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சி செய்துள்ளனர். இதை பல பேர் தங்களுடைய செல்போனில் பதிவு செய்துள்ளனர். ஏன் கள்ள ஓட்டு போட விடமாட்டீறிங்க என தி.மு.க.வினர் அதிகாரிகளிடம் பகிரங்கமாக மிரட்டல் விட்டுள்ளனர். இங்கு இருக்க மாட்டீர்கள் என அதிகாரிகளிடம் நீங்கள் இடமாற்றம் செய்யப்படுவீர்கள் என்று மிரட்டுகின்றனர். எந்த அளவுக்கு அதிகாரிகளை மிரட்டி கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.