சுவிசில் நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்

230 0

கடந்த 17.02.2022 முதல் சுவிற்சர்லாந்து அரசு மகுடநுண்ணித் தொற்றினைத் தடுப்பதற்கு அறிவித்திருந்த பெரும்பாலான நடவடிக்கைகளை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டின் அதிபர் இக்னாச்சியோ காசிஸ் இவ்வாறு ஊடக சந்திப்பில் சுவிஸ் அரசின் தளர்வுகளை அறிவித்துள்ளார்.

மகுடநுண்ணித்தொற்று சூழல் 18. 02. 22

சுவிற்சர்லாந்து அரசின் நலவாழ்வுத் துறையின் தரவுகளின் படி 18. 02. 2022 வெள்ளிக்கிழமை அன்று 16 183 புதிய தொற்றுக்களும், கடந்த ஏழு நாட்களின் விகிதப்படி ஒரு நாளுக்கு 18 725 தொற்றுக்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த கிழமையுடன் ஒப்பிட்டால் 24 விகிதம் நோய்தொற்றுக் குறைவடைந்துள்ளது. 18. 02. 2022 பதிவுகளின் படி 1671 ஆட்கள் மகுடநுண்ணித் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் தங்கி மருத்துவம் பெற்று வருகின்றார்கள்.

கடந்த கிழமையுடன் ஒப்பிட்டால் 10 விகிதம் இத்தொகை குறைவடைந்துள்ளது. அதுபோல் செறிவான (தீவிர) மருத்துவம் (சிகிச்சை) பெறுவோர் தொகை 176 ஆகும். இது கடந்த கிழமையுடன் ஒப்பிட்டால் 12 விகிதம் குறைவாகும். கடந்த கிழமை 13 ஆட்கள் மகுடநுண்ணித் தொற்றால் இறந்துள்ளனர்.

தடுப்பூசிச்சான்று வீட்டிலிருந்த படி பணி

17. 02. 2022 முதல் மகுடநுண்ணித் (கோவிட் 19) தடுப்பூசி சான்று, வீட்டில் இருந்தபடி பணி செய்ய வேண்டுகை விடுக்கப்பட்ட முன்மொழி ஆகியவற்றை சுவிற்சர்லாந்து அரசு மீளப்பெற்றுக்கொள்கின்றது.

ஆனாலும் தொழில் நிலையங்களில் தமது பணியாளர்களை தொற்றில் இருந்து காக்கும் அடிப்படை நடவடிக்கைகளை நிறுவனங்கள் தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது.

நிறுவனங்கள் விரும்பின் தொடர்ந்தும் தமது பணியாளர்கள் வீட்டில் இருந்தபடி பணிசெய்ய ஒப்புதல் அளிக்கலாம். மறையிடர் அல்லது முன்நோயிற்கு ஆட்பட்டு இலகுவாக தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்களை பணியித்தில் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் எனும் விதி மீனத்திங்கள் (பங்குனி) 2022 வரை தொடர்கின்றது.

2ஜி, 3ஜி விலக்கப்படுகின்றது

இதுவரை இருந்து வந்த 2ஜி, 3ஜி எனும் விதிகளும் வியாழக்கிழமை நீக்கப்படுகின்றது. கடைகளுக்குள், உணவகங்களில், பண்பாட்டு நிறுவனங்களில் இதன் பொது நிலையங்களுக்கு மற்றும் தனியார் பொது நிகழ்வுகளுக்கு தடுப்பூசி சான்று காட்டாது உள்நுழையலாம்.

முகவுறை 

முகவுறை பொதுப்போக்குவரத்திலும் மற்றும் நலவாழ்வு நிலையங்களிலும் (மருத்துவமனை, மூதாளர் இல்லங்கள், வீட்டு மருத்துவர் போன்ற) தொடர்ந்தும் மீனத்திங்கள் (மார்ச்) 2022வரை அணிந்திருக்க வேண்டும்.

அதுபோல் மகுடநுண்ணித் தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களும் மட்டுமே முகவுறை அணிய வேண்டும். ஆனால் மூதாளர் இலங்களில் தங்கி இருப்போர் 17.02.22 வியாழன் முதல் முகவுறை அணியத் தேவையில்லை. விருந்தினர்களாக வருகை அளிப்போர் மற்றும் இலங்களின் பணியாளர்கள் மார்ச் 2022 வரை முகவுறை அணிந்திருக்க வேண்டும்.

முகவுறை கட்டாயம் நீக்கல்

17. 02. 2022 வியாழக்கிழமை முதல் சுவிற்சர்லாந்து நாட்டில் கடைகளில், உணவகங்களில், பண்பாட்டு நிலையங்களில், பொது நிலையங்களில், அதுபோல் நிகழ்வுகளில் முகவுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனும் விதி விலக்கப்படுகின்றது.

தொழிற்பணி நிலையங்களில் முகவுறை அணிந்திருக்க வேண்டும் எனும் விதியும் நீக்கப்படுகின்றது. ஆனால் தொழில் வழங்கும் நிறுவனங்கள் தமது விரும்பில் தொழில் செய்வோர் தொடர்ந்தும் முகவுறை அணிய வேண்டும் எனும் விதியை தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

தனிவகை சூழல் சிறப்புச்சட்டம் (Besondere Lage)

பெருந்தொற்றுக் காலத்தில், நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்த, சுவிற்சர்லாந்து அரசினால் பாராளுமன்ற ஒப்புதலுடன் இயற்றப்பட்ட தனிவகைச் சிறப்புச் சட்டம் மார்ச் 2022 நிறைவில் நீக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பு செயலாக்கக்குழு கலைக்கப்படுகிறது

சுவிற்சர்லாந்து அரசு பெருந்தொற்றுக் காலத்தில் அமைத்திருந்த சிறப்பு பெருந்தொற்று செயலாக்கக் குழு (Taskforce) மார்ச் 2022 நிறைவில் கலைக்கப்படும்.

இக்குழுவில் மருத்துவர்கள், பெருந்தொற்று நோய் ஆய்வாளர்கள், பல்துறை அறிஞர்கள் உறுப்பு வகித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை சுவிற்சர்லாந்து அரசிற்கு பெருந்தொற்றினை கட்டுப்படுத்த மதியுரை மற்றும் முன்மொழிவுகள் வழங்கி வந்திருந்தனர்.

பெருநிகழ்வுகள்

இதுவரை பெருநிகழ்வுகளுக்கு மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டிய சிறப்பு விதி நடைமுறையில் இருந்து வந்தது. இவ்விதியும் 17. 02. 22 முதல் நீக்கப்படுகின்றது.

தனியார் நிகழ்வுகள்

தனியார் நிகழ்வுகள், சந்திப்புக்களுக்கு இதுவரை இருந்து வந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒன்றுகூடலுக்கான வரையறைத் தொகை கட்டற்று முழுமையாக நீக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல்

மகுடநுண்ணித் தொற்றுக்கு ஆளானது உறுதிப்படுத்தப்படும் நோயாளர் மட்டும் 5 நாட்களுக்கு தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விதிமட்டும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இவ்விதியும் மீனத்திங்கள் 2022 வரைமட்டுமெ நடைமுறையில் இருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

நோய்த்தொற்று பரிசோதனை

நோய்த் தொற்றுக்கு ஆளானதாக ஐயப்பட்டால் தொடர்ந்தும் கட்டணம் அற்று பரிசோதனைகள் செய்துகொள்ளலாம்.அன்ரிகென் (Antigen)“ எனப்படும் நோய் எதிர்ப்புத் திறனூட்டி ஆன உடற்காப்பூக்கிப் பரிசோதனையும், அதுபோல் பல்படிமநொதித் தொடர்வினை (PCR) பரிசோதனை என்பன நோய் முன்னறி குறி இருப்பின் அல்லது நோயிற்கு ஆட்பட்டவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருப்பின் கட்டமின்றி செய்துகொள்ளலாம்.

பாடசாலைகளில் நடைபெறும் தொடர்மீள் பரிசோதனைகளுக்கான கட்டணத்தை சுவிற்சர்லாந்து நடுவனரசு மீனத்திங்கள் (மார்ச்) 2022 வரை மட்டுமே பொறுப்பேற்றுக்கொள்கின்றது.

சுவிற்சர்லாந்திற்குள் பயண உள்நுழைவு

சுவிஸ் நாட்டு எல்லைக்குள் நுழையும்போது இதுவரை கடைப்பிடிக்கப்படும் தூய்மைக்காப்பு நடவடிக்கைகள் 17. 02. 2022 வியாழன் முதல் முழுமையாக விலக்கப்படுகின்றது.

தடுப்பூசி மற்றும் மகுடநுண்ணித் தொற்றுக்கு ஆளாகி நோயில் இருந்து மீண்ட சான்று அல்லது நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்த சான்றுகள் என்பன 17. 02. 2022 முதல் சுவிசிற்குள் நுழையும்போது காட்டத் தேவையில்லை.

சுவிற்சர்லாந்து நடுவனரசு நலவாழ்வுத்துறை (சுகாதர அமைச்சு) தமது இணையத்தளத்தில் சுவிற்சர்லாந்து நாட்டிற்குள் நுழையும்போது கட்டாயம் நிறைவுசெய்ய வேண்டுகை விடத்திருந்த உள்நுழைவுப் படிவமும் வியாழக்கிழமை முதல் நீக்கப்படுகின்றது.

சுவிற்சர்லாந்தில் இருந்து பயண வெளியேற்றம்

சுவிற்சர்லாந்து அரசு தடுப்பூசிச்சான்றிதழ் காட்ட வேண்டிய கட்டாயத்தை நீக்கிகொண்டுள்ளது. இதன்படி சான்றிதழ் காட்டத் தேவையில்லை.

பயண இலக்கு நாடுகள் தடுப்பூசிச்சான்று வேண்டுகை விடுத்திருப்பின் பயணிகள் அதனைக் காண்பிக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ளும் தடுப்பூசிச்சான்றுகளை தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களுக்கு தொடர்ந்தும் சுவிஸ் அரசு வழங்கும்.

தடுப்பூசி இட்டுக்கொள்ளாதவர்களுக்கு இவ்வகையில் முடக்கம் தொடரலாம், இதன்படி சில நாடுகளுக்கு தடுப்பூசி இட்டுக்கொள்ளாதோர் பயணம் செய்ய முடியாது போகும்.

நிறைவாக

இங்கு குறிக்கப்படும் தளர்வு நடவடிக்கையின் சுவிற்சர்லாந்து நடுவன் அரசு அறிவித்துள்ளது. இதனை விட இறுக்கமான பெருந்தொற்று நடவடிக்கைகளை மாநில அரசுகள் விருப்பின் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் விரும்பின் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயத்தை தாம் விரும்பும் இடங்களுக்கு அறிவிக்கலாம். அதுபோல் காப்பமைவு (Schutzkonzept) வரைவுகளில் சேர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் தாமாகவும் முன்மொழியலாம். மேலும் தனியார் நிறுவனங்களும் தாம் தொடர விரும்பும் பாதுகாப்பு விதிகளை தம் விருப்பில் தொடரலாம்.

எடுத்துக்காட்டாக தலைமுடி திருத்தகம், வீட்டு மருத்துவர்கள் போன்றோர் உள்நுழைவோர் முகவுறையினை அணிய வேண்டுகை முன்வைக்கலாம் அல்லது தடுப்பூசி சான்றினை வேண்டலாம். சுவிஸ் அதிபர் தெரிவித்த தொடுவானில் தெரியும் ஒளி, முழு விடியலாக தளர்வினை முழுமையாக அளிக்குமா என்பது மீனத்திங்கள் (மார்ச்) 2022 தெரியவரும்.