கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

317 0

நேற்று(18) மாலை 3.30 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பானு பிரகாஷ் ஆகியோரோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேச்சுக்களில் ஈடுபட்டார்.

அன்றில் இருந்து இன்றுவரை சம்பந்தனும் அவரை போன்று தமிழ் தேசிய போர்வையை போர்த்தியவர்களும் இந்தியாவே ஈழத்தமிழருக்கான தீர்வை பெற்றுதரும் என கூறி சிறிலங்கா இந்திய அரச சலுகைகளில் தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

கொவிட்19 உருமாற்றம் அடைந்து திரிபுகளை ஏற்படுத்துவது போல காலத்திற்கு காலம் ‘ஜெனீவா காச்சல்’ பல்வேறு வகைகளில் வரும் . அதே போன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

1) கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி மிகவும் இரகசியமாக காணாமற் போனோருக்கான அலுவலகம் திறக்கப்பட்டது.

2) மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் அதுபோன்ற கடுமையான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது ஏனைய குழுக்கள் கண்டறிந்த தகவல்கள் தொடர்பான விசாரணைகள் ஆராய்ச்சிகள் மற்றும் அறிக்கையிடல்கள் அல்லது உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதியால் 2021 ஜனவரி 21ஆம் திகதியன்று உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

3) போரில் களமாடியவர்களை நினைவுகூர அனுமதியில்லைஎன்ற போதும் போரின்போது உறவினர்கள் உயிரிழந்திருப்பாராயின் தனிப்பட்ட ரீதியில் அவர்களை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் எனஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு பல் வேறு நாடகங்கள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூடும் காலத்தில் அரங்கேற்றப்பட்டதுடன் இன்றும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது இப்படி இருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூத்தோ வேறு வகையில் மேடையேற பார்க்கின்றது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முறியடிக்க சிறிலங்கா அரசும் அதனை ஆளும் ராஜபச்சே குடும்ப அரசாங்கமும் அவர்கள் போடும் எலும்பு துண்டுகளை நக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து இராஜதந்திரம் என்ற முகமூடியை அணிந்து ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் ஏமாற்றுகிறார்கள்

நேற்றைய இவர்களின் கூத்தின் கருப்பொருள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சிறிலங்காவுக்கான தமது விஜயத்தின்போது “தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நேரில் சென்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

 

2015 ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்கட்சியாக அங்கம் வகித்தது . அப்போதைய எதிர்கட்சி தலைவரான இரா.சம்பந்தன் அக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் என்ன செய்தார். நாடாளுமன்றத்திற்கு சென்று அங்கு உணவருந்தி நித்திரை கொண்டுவிட்டு இப்போது கண்விழித்து “சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என மோடியின் தூதுவனிடம் மோடிக்கு தூதுவிடும் காட்சி அற்புதமான நகைச்சுவை.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் சம்பந்தனின் ‘ கபட’ நாடகம் பிரமாதம்.