அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தேச தொழிசங்க நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தம்

320 0

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கத்திடம் வினவிய போது ,

சம்பள பிரச்சினை அமைச்சரவை முடிவுகள் ஊடாக தீர்க்கப்படக் கூடாது என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்.

தேசிய சம்பள ஆணைக்குழுவிற்கு அனுப்பி அதனூடாகவே சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் , அதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.

எம்மால் முன்வைக்கப்பட்ட இரண்டாவது கோரிக்கை தேசிய சம்பள கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். அதற்கமைய தேசிய சம்பள கொள்கை பாதுகாக்கப்படும் என்றும் , எவ்விதத்திலும் அதனை மீறி செயற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் இவ்வாண்டுக்கான இடமாற்ற பட்டியலை உடனடியாக வெளியிடுமாறு இந்த பேச்சுவார்த்தையின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அத்தோடு இலங்கை மருத்துவ சபையின் தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு தொடர்பான முதலாவது படிமுறை நிறைவடைந்துள்ளது.

அரச அச்சகத்தினால் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னரே அது நடைமுறைப்படுத்தப்படும்.

இதனுடன் தொடர்புடைய 7 படிமுறைகளில் ஒன்று மாத்திரமே நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள படிமுறைகளை துரிதப்படுத்துவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதளை அடிப்படையாகக் கொண்டு எமது தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.