திருமங்கலம் நகராட்சி 10-வது வார்டு வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரம் பழுது

182 0

திருமங்கலம் நகராட்சி 10-வது வார்டில் உள்ள நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஆண்களுக்கான வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படவில்லை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த நகராட்சியில் 22,809 ஆண் வாக்காளர்கள், 24,928 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 47 ஆயிரத்து 738 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 49 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 பதற்றமானவை ஆகும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடந்தது.

திருமங்கலம் நகராட்சி 10-வது வார்டில் உள்ள நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஆண்களுக்கான வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படவில்லை. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 1,350 வாக்காளர்கள் உள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் அங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. பழுதான எந்திரத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். எந்திரம் பழுது நீக்கப்பட்டதும் அந்த வாக்குச்சாவடியில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.

அதுவரை ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்தனர். 10-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்களே களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.