பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

265 0

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் தொடர்புடைய வகையில் அரசாங்கத்தினால் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 7 பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாத்தடைச்சட்டத்துடன் தொடர்புடையதாக அரசாங்கத்தினால் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 7 பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2021 மார்ச் மாதம் 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் 10 மாதங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதான டிவானியா முகுந்தன், கடந்த 2019 மேமாதம் 9 ஆம் திகதி விசாரணைகளுக்கெனக் கைதுசெய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் இமாம் மொஹமட் இம்ரான், கடந்த 2020 மேமாதம் 5 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 28 வயதான செல்வநாயகம் சசிகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள முறை, அவர்களது குடும்பத்தினர் முகங்கொடுத்திருக்கக்கூடிய சிக்கல்கள், பிணைக்கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பு, பொருளாதார ரீதியில் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் தாக்கங்கள் என்பன தொடர்பிலும் மன்னிப்புச்சபையின் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு,

இலங்கையைப் பொறுத்தமட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டமானது நபர்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டில் ஓர் தற்காலிகச் சட்டமாகவே நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் 1982 ஆம் ஆண்டில் அது நிரந்த சட்டமாக்கப்பட்டது.

எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி நபரொருவரை நீண்டகாலத்திற்குத் தடுத்துவைப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய இச்சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுமையை இலங்கையர்கள், குறிப்பாக சிறுபான்மையினத்தவர்கள் தற்போதும் தாங்கிக்கொண்டிருக்கின்றனர்.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படும் என்று இல்ஙகை அரசாங்கம் பல்வேறு தடவைகள் வாக்குறுதி வழங்கியிருந்தாலும், தற்போதுவரை அச்சட்டத்தில் உரியவாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் நபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்து தடுத்துவைப்பதற்கான ஓர் ஆயுதமாக தொடர்ந்தும் அச்சட்டம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. இருப்பினும் இந்தத் திருத்த முன்மொழிவுகள் அச்சட்டத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தவறிவிட்டன என்று நாம் கருதுகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு உள்ளக மற்றும் சர்வதேசத்தரப்புக்களினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், அதனை முடிவுறுத்துவதற்கான முயற்சியாக பெருமளவிற்கு எவ்வித பயனையும் அளிக்காத திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருக்கின்றது.

ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு இந்தத் திருத்தங்கள் போதுமானவையல்ல.

ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அவர்கள் குற்றம் புரிந்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் காணப்படும்பட்சத்தில், அவர்களுக்கு எதிராக உரியவாறு வழக்குத்தாக்கல்செய்து, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் அச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்தவேண்டும். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

மேலும் அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முழுமையான மீளாய்வொன்றினை மேற்கொள்வதுடன் அவர்கள் பிணைக்கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதுடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படாத குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலைசெய்யவேண்டும்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் சட்ட உதவியை நாடுவதற்கும் அவர்களது குடும்பத்தினரை சந்திப்பதற்குமான வாய்ப்பை வழங்குவதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் காரணமாக மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிறைவாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்படும் எந்தவொரு திருத்தமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் அச்சட்டம் கொண்டிருக்கக்கூடிய கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை அதன் அறிக்கையின் ஊடாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.