மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகை அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வல்லல்பட்டையுடன் தங்கியிருந்த அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஆயிரத்து 700 கிராம் வல்லல் பட்டையை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸாருடன் இணைந்து விடுதியை முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனவும், மட்டக்களப்பில் வல்லல்பட்டையை விற்பனை செய்வதற்காக அதன் மாதிரியுடன் வந்து விடுதியில் தங்கியிருந்துள்ளார் எனவும், பெரும் தொகையான வல்லல்பட்டை அளுத்கமவில் பதுக்கி வைத்திருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

