மேற்கு வங்க சட்டமன்றம் முடக்கம்- ஆளுநருக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்

245 0

அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு முதல்-மந்திரி மம்தாபானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்காருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
தான் கேட்கும் விவரங்களுக்கு உரிய விளக்கம் அளிப்பதில்லை என மாநில அரசு மீது கவர்னர் குற்றம் சாட்டி வருகிறார். அதே போல் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறி வருகிறார்.
இந்த மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் பாராளுமன்ற மேல்-சபையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான சுகேந்து சேகர் ராய், மேற்கு வங்காள கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.
மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் உரையுடன் தொடங்க இருந்தது. இதில் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் மேற்கு வங்காள சட்டசபையை முடக்கி கவர்னர் ஜக்தீப் தங்கர் அதிரடியாக உத்தரவிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது பிரிவின் வாயிலாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கு வங்காள சட்ட சபையை பிப்ரவரி 12-ந்தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள கவர்னரின் இந்த நடவடிக்கை அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை முடக்கப்பட்டுள்ளதால் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநில அரசால் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்காள சட்ட சபையை முடக்கிய கவர்னரின் செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்காள ஆளுநர் மேற்கு வங்காள சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த செயல் உயர் பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் உரிமை மற்றும் நிறுவப்பட்ட விதி முறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.
அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநில தலைமை பொறுப்பில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது.
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் குழப்பத்தால் அரசுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில்தான் கவர்னர் சட்ட சபையை முடக்கியதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.