மொரட்டுவை – ஏகொடஉயண பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது , இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபரொருவர் உயிரிழந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (11) முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மொரட்டுவை – ஏகொடஉயண பொலிஸ் பிரிவில் முகத்துவாரம் இசுருசிறி பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருந்த இடமொன்றை சோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது , அங்கிருந்த ஒரு சந்தேகநபர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது விசேட அதிரடிப்படையினரும் குறித்த சந்தேகநபர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த சந்தேகநபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

