தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தேர்தல் பிரசாரம்

199 0

தி.மு.க. இளைஞரணி மாநில தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒருசில நாட்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண திட்டம் வகுக்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கொரோனா தொற்று பரவலுக்கு இடையே நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நேரடி தேர்தல் பிரசாரத்தை தவிர்த்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரத்தை தொடங்க உள்ளார். ஆனாலும் தி.மு.க.வில் இருந்து நட்சத்திர பேச்சாளர்கள், 2-ம் கட்ட தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

தி.மு.க. இளைஞரணி மாநில தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒருசில நாட்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண திட்டம் வகுக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் அவரது சுற்றுப்பயணம் திட்டமிடப்படுகிறது.

சென்னையில் நாளை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 7 வார்டுகளிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது சுற்றுப்பயணம் தொடங்குகிறது. தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் முக்கிய பேச்சாளர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் அரசு செய்த சாதனைகளை விளக்கி இந்த பேச்சாளர்கள் வாக்காளர்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற மக்களை சந்திக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.

“உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி” என்ற குறிக்கோளுடன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.