பாரதிய ஜனதா விலகியது மகிழ்ச்சி அளிக்கிறது- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

371 0

ஆரம்பம் முதல் கடைசி வரை நீட் தேர்வு வருவதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும்தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தி.மு.க. தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக உண்மைகளை மறைத்து பொய்களை கட்டவிழ்த்து உள்ளது. அ.தி.மு.க. தான் நீட் தேர்வை கொண்டு வந்தது போல் ஒரு மாயத்தை உருவாக்குகின்றனர். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறினார்.

தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆன பின்பும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவில்லை. மத்திய அரசு சட்டம் இயற்றி நீட் தேர்வை கொண்டு வந்தது. கல்வி பொதுப்பட்டியலில் இருந்ததால் மாநிலத்துக்கும் அதிகாரம் இருக்கிறது என்ற அடிப்படையில் நீட் மசோதாவை நீக்கிட முயற்சி செய்தோம்.

அதன் அடிப்படையில் ஜனாதிபதிக்கு சட்ட மசோதாவை அனுப்பி வைத்தோம். அவர் பதில் தராமல் நிறுத்தி விட்டார். அதேபோல் தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் நீட் விலக்கு குறித்து சட்டம் இயற்றி கவர்னருக்கு அனுப்பினர்.ஆனால் கவர்னர் இரண்டு காரணங்களை கூறி திருப்பி அனுப்பி விட்டார். தி.மு.க. அரசு தமிழக மாணவர்களின் உயிரோடு விளை யாடிக்கொண்டிருக்கிறது.

ஆரம்பம் முதல் கடைசி வரை நீட் தேர்வு வருவதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும்தான். நீட் தேர்வு வருவதற்கு அ.தி.மு.க. எப்படி காரணமாகும்? இன்றைக்கு நீட் தேர்வை பற்றி நாடாளுமன்றத்தில் பேசும் ராகுல்காந்தி அன்றைக்கு நீட் தேர்வை கொண்டு வந்த போது எங்கே சென்றார்?

அன்றைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் மறுசீராய்வு மனுவை போட வில்லை என்றால் நீட் தேர்வு வந்திருக்காது.

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு முறைகேடுகளை மறைக்க தி.மு.க. தற்போது நீட் தேர்வை கையில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்கிறது. கவர்னர் இரண்டு கேள்விகளை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். அதற்கு உரிய பதிலை தமிழக அரசு வழங்க வேண்டும்.

அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு இது எதிரானது என்றும், மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் கூறியுள்ளார். அதற்கு இவர்கள் தகுந்த பதிலை கூற வேண்டும்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா விலகியது அ.தி.மு.கவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.